- கிளாம்பாகம் பேருந்து நிலையம்
- மாத்ரவஞ்சேரி
- கிளாம்பாகம் பேருந்து நிலையம்
- கிளாம்பாகம் பேருந்து நிலையம்
- தின மலர்
கூடுவாஞ்சேரி, ஜூன் 20: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சுகாதார உணவுகள் வழங்கப்படுவதாக பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வலியுறுத்துகின்றனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையான வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில், சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்து பயணிகளை கவருவதற்காக ஐயஞ்சேரி பிரதான சாலை ஓரத்தில் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டு சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பதாகவும், இதனை சாப்பிடுபவர்களுக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பேருந்துகளில் சரிவர பயணம் செய்யாமல் பாதி வழியிலேயே இறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து பஸ் பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்ஜேரி கூட்ரோட்டில் இருந்து பிரதான சாலையின் இருபுறங்களிலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்து பயணிகளை கவர்வதற்காக ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் போட்டி போட்டு கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சாப்பிட வருபவர்களை ஈர்ப்பதற்காக அனைத்து உணவு வகைகளிலும் வெல்லம் சேர்க்கப்படுகின்றன. இதனால் சுகர் இல்லாதவர்களுக்கு சுகர் வருகிறது. மேலும் சுகர் இருப்பவர்களுக்கு அதிக அளவில் தலைச்சுற்றல் வருகின்றன.
மேலும், பிரியாணி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வாந்தி, பேதி, தலைச்சுற்றல்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ் பயணிகள் பேருந்துகளில் முழுமையாக பயணம் செய்ய முடியாமல், பாதி வழியிலேயே இறங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலை ஓரத்தில் உள்ள ஓட்டல்களில் விறகு அடுப்பு மூலம் சமைப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இதனால், கண் எரிச்சலில் சிக்கி மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு அதிரடியாக சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகளில் சுகாதாரமற்ற உணவுகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.