செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் மாலை 6 மணி முதல் காலை 6 வரை எரியாமல் உள்ளதால் மேம்பாலத்தில் செல்லக்கூடிய வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் இந்த மேம்பாலத்தை கடந்துதான் செங்கல்பட்டு நகருக்குள் வர முடியும். மேலும், 24 மணி நேரமும் வாகனங்கள் செல்வதால் மிக முக்கியமானது இந்த ரயில்வே மேம்பாலம். தினமும் கார், வேன், ஆட்டோ, தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் இந்த மேம்பாலத்தை கடந்துதான் செல்ல வேண்டும்.
தற்போது, மேம்பாலத்தை மறைக்கும் அளவிற்கு மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது. எனவே, ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை சீரமைத்து மாலை நேரங்களில் ஒளிரச் செய்யவேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.