×

பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்

*ரூ.1.20 கோடிக்கு வர்த்தகம்

பொள்ளாச்சி : வருகிற 17ம் தேதி பக்ரீத் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதால் குர்பானி கொடுப்பதற்காக இஸ்லாமியர்கள் ஆடுகளை வாங்கி வருகின்றனர். பொள்ளாச்சியில் நேற்று நடந்த சந்தையின் போது ஆடு விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றதுடன்,கூடுதல் விலைக்கு போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே ஒரு பகுதியில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைபெறுகிறது. இங்கு, பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை,கோட்டூர்,உடுமலை,மடத்துக்குளம்,கிணத்துக்கடவு,நெகமம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து கொண்டு வரப்படும் செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கிடாக்களை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

இந்த மாதத்தில் கடந்த சில வாரமாக சந்தைக்கு ஆடுகள் வரத்து ஓரளவே இருந்தாலும் நேற்று நடந்த சந்தையின் போது, அதிகாலை முதலே வியாபாரிகள் அதிகளவு ஆடுகளை கொண்டு வந்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1200க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதனால் பல மாதத்திற்கு பிறகு மீண்டும் சந்தை களைகட்டியது.வரும் 17ம் தேதி பக்ரீத் பண்டிகை என்பதால்,ஆடுகளை வாங்க உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி,கேரள வியாபாரிகளும் அதிகளவு வந்திருந்தனர். இதனால், ஆடுகள் விற்பனை விறுவிறுப்புடன்இருந்ததுடன், வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதிலும் எடை அதிகமுள்ள கிடாவுக்கு கிராக்கி ஏற்பட்டது.

கடந்த வாரத்தில் அதிக பட்சமாக 30 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.23 ஆயிரத்துக்கே விற்பனையானதாக கூறப்படுகிறது.ஆனால் நேற்று 28 முதல் 30 கிலோ எடைகொண்ட செம்மறி மற்றும் வெள்ளாடு ரூ.26ஆயிரம் வரையிலும், சுமார் 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான கிடா ரூ.37 ஆயிரம் வரையிலும் என எப்போதும் இல்லாத வகையில் கூடுதல் விலைபோனது. நேற்று ஒரே நாளில் மட்டும் சுமர் ரூ.1.20 கோடிக்கு வர்த்தகம் இருந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகை நெருங்குவதால் பொள்ளாச்சி சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Bakrit festival ,Qurbani ,
× RELATED தியாகத்திற்கு ஒரு திருநாள்…!