×
Saravana Stores

ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

டெல்லி: ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (IPC), குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சிய சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது. 3 சட்டங்களையும் செயல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

குறிப்பிட்ட 3 குற்றவியல் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொதுப் பட்டியலில் இருந்தபோதிலும் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்காமல் 3 கிரிமினல் சட்டங்களை நிறைவேற்றியதாக தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 3 கிரிமினல் சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கடிதத்தில் விமர்சித்துள்ளது.

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்களும் அமலுக்கு வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு தனது ஆட்சேபத்தை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள 3 கிரிமினல் சட்டங்கள் தொடர்பாக மாநில அரசுகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்றும் 3 கிரிமினல் சட்டங்கள் குறித்து கருத்தை தெரிவிக்க மாநிலங்களுக்கு போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் பங்களிப்பே இல்லாமல் நாடாளுமன்றத்தில் 3 கிரிமினல் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

3 கிரிமினல் சட்டங்களுக்கும் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாக்ரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷிய அபினியம் என சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. முக்கிய சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டியிருப்பது அரசியல் சட்டத்தின் 348-வது பிரிவை அப்பட்டமாக மீறும் செயலாகும். நாடாளுமன்றத்தில் அனைத்துச் சட்டங்களும் ஆங்கிலத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அரசியல்சட்டப்படி கட்டாயமாகும்.

3 புதிய கிரிமினல் சட்டங்களிலும் அடிப்படையில் சில தவறுகள் உள்ளதாக முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 103-வது பிரிவு இரு வேறுபட்ட கொலைச் செயல்கள் பற்றி குறிப்பிட்ட போதிலும் ஒரே தண்டனையே விதிக்க வகை செய்கிறது. பாரதிய நாக்ரிக் சுரக்ஷா, பாரதிய நியாய சன்ஹிதா சட்டங்களில் தெளிவற்ற குழப்பமான சட்டப்பிரிவுகளும் முரண்பட்ட விளக்கங்களும் உள்ளன.

3 புதிய சட்டங்களையும் அமல்படுத்தும் முன் கல்வி நிலையங்களுடன் விவாதிக்க வேண்டியது அவசியம். சட்டக் கல்லூரி மாணவர்களின் பாடத் திட்டங்களில் உரிய மாற்றங்கள் கொண்டு வருவதற்கு கால அவகாசம் அவசியம். நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை, தடயவியல்துறை போன்றவற்றிலும் தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்ய வேண்டியதும் அவசியம். 3 புதிய கிரிமினல் சட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான விதிமுறைகளை அவசரகதியில் ஆலோசிக்காமல் ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளது.

The post ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Amit Shah ,Union Government ,Delhi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும்...