×

அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை; கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர் அகற்றம்

அண்ணாநகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன்காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தேங்கிய நீரை உடனடியாக அகற்றி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் அவதிப்பட்டனர். காய்கறிகள், பூக்கள், பழங்கள் வாங்க மக்கள் வருகை குறைந்ததால் பொருட்கள் தேக்கம் அடைந்தது.

இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி இன்று காலை காய்கறி, பூக்கள், பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது காய்கறிகள் மார்க்கெட்டில் தேங்கிய மழை நீரை உடனடியாக அகற்றும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் அங்காடி நிர்வாக ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறியதாவது;
கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்கினால் அவற்றை சுத்தம் செய்வதற்கு ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வியாபாரம் பாதிக்கக்கூடிய அளவில் மழைநீர் சூழ்ந்திருந்தால் வியாபாரிகள் உடனடியாக அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் செய்யலாம். வியாபாரிகளுக்கு குறைகள் இருந்தால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கலாம். உங்களுடைய புகார் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட்டில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டர் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மார்க்கெட் முழுவதும் தூர்வாரும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இவ்வாறு தெரிவித்தனர்.

The post அங்காடி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை; கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Annanagar ,Chennai ,Coimbed ,Market ,Dinakaran ,
× RELATED குளித்தலை அண்ணாநகர் புறவழிச்...