×

10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ்லெட்: நெல்லை பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

நெல்லை: நெல்லையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ்லெட் வழங்கி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். நெல்லை மீனாட்சிபுரத்தில் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வரை 400க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவி அபிநிஷா 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இவர் பாடங்களில் தமிழ் – 95, ஆங்கிலம் – 100, கணிதம் – 99, அறிவியல் – 98, சமூக அறிவியல் – 100 மதிப்பெண் பெற்றார்.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி நேற்று திறக்கப்பட்டது. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பள்ளிக்கும் வழக்கம் போல் மாணவ, மாணவிகள் புதிய கல்வி ஆண்டு தொடங்கும் உற்சாகத்தில் வந்தனர். பள்ளியின் துவக்க நாளான நேற்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய உடன் அனைத்து மாணவிகள் முன்னிலையில் 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி அபிநிஷாவை அழைத்த தலைமை ஆசிரியை மேரி மார்கரெட் அவருக்கு 10ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்றதற்காக பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் ஆங்கிலத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றதற்காக மாணவி அபிநிஷாவிற்கு ஆங்கில ஆசிரியை மகேஸ்வரி தங்க மோதிரம் அணிவித்தார். சமூக அறிவியலில் 100 மதிப்பெண்கள் பெற்றதற்காக மாணவி அபிநிஷாவிற்கு சமூக அறிவியல் ஆசிரியை சுதந்திரா வெள்ளி பிரேஸ்லெட் அனைவரது முன்னிலையிலும் அணிவித்தார்.

இதனால் அனைத்து மாணவ, மாணவிகளும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கணிதத்தில் தலா 100 மதிப்பெண்கள் பெற்ற 4 மாணவிகளுக்கு கணித ஆசிரியை குப்பு ஜானகி வெள்ளி நாணயம் பரிசு வழங்கினார். முதலிடம் பெற்ற மாணவி அபிநிஷா அதே பள்ளியில் தற்போது பிளஸ் 1 கணிதம், உயிரியல் பாடப் பிரிவில் சேர்ந்துள்ளார். அரசு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ்லெட் வழங்கி கௌரவித்தது அனைத்து மாணவிகளுக்கும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post 10ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு தங்க மோதிரம், வெள்ளி பிரேஸ்லெட்: நெல்லை பள்ளி ஆசிரியர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Corporation Government Girls Higher Secondary School ,Nellai Meenakshipuram ,Dinakaran ,
× RELATED நெல்லையில் ஆவுடையப்பன் தலைமையில் மாணவரணி நேர்காணல் ஆலோசனை கூட்டம்