×
Saravana Stores

பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற்று வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் : கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம், ஜூன் 1: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அரசு பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி பெற்று வரும் ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கேட்டு கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 23 தொடக்கப்பள்ளிகள், 2 நடுநிலைப்பள்ளிகள், 4 உயர்நிலைப்பள்ளிகள், 3 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 32 பள்ளிகள் செயல்படுகின்றன.

ஈஞ்சம்பாக்கம், ரெட்டமங்கலம், மௌலிவாக்கம், ஓரிக்கை, நத்தப்பேட்டை, கீழம்பி, ஆசூர், அத்திவாக்கம், திருவங்கரணை, மருதம், சாலவாக்கம், கெருகம்பாக்கம், மாங்காடு, ஸ்ரீராமபாளையம், பேரீஞ்சம்பாக்கம், எடையார்பாக்கம், நந்தம்பாக்கம், தண்டலம், சென்னாகுப்பம், மேல்ஒட்டிவாக்கம் என்று 23 தொடக்கப்பள்ளிகளும், தழையம்பட்டு, கிளாய் என்ற 2 நடுநிலைப்பள்ளிகளும் தண்டலம், சென்னாகுப்பம், மேல்ஒட்டிவாக்கம், ஓரிக்கை என்று 4 உயர்நிலைப்பள்ளிகளும், ஈஞ்சம்பாக்கம், ரெட்டமங்கலம், மௌலிவாக்கம் என்று 3 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன.

இப்பள்ளிகளில் 2023-2024ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தண்டலம் உயர்நிலைப்பள்ளியில் 100 சதவீத தேர்ச்சியும், மற்ற உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 90 சதவீதத்திற்கு மேலும் மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 மேல்நிலைப்பள்ளிகளும் 90 சதவீதத்திற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றதோடு, ஈஞ்சம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் ஜி.கணேஷ்குமார் 563/600 மதிப்பெண்கள் பெற்று ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அரசுப்பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அரசு பள்ளியில் 20 சதவீத முன்னுரிமையும், 6 முதல் 12ம் வகுப்பு அரசுப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகள் இடைநிற்றலை தடுக்க அரசு பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு பயின்று மேற்படிப்பு பயிலும் மாணவிகளுக்கு (புதுமைப்பெண் திட்டம்) மாதந்தோறும் ₹1000 அரசினால் வழங்கப்படுகிறது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுபுத்தகங்கள், விலையில்லா மிதிவண்டி, நான்கு இணை சீருடை, புத்தகப்பை, வண்ண பென்சில்கள், காலணி, வண்ண கிரையான்ஸ், இலவச பேருந்து பயண அட்டை, ஆதிதிராவிடர் நல ஊக்கத்தொகை, கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வருடந்தோறும் (3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ₹500, 6ம் வகுப்புக்கு ₹1000, 7ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ₹1500), தூய்மை பணியாளர் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, விடுதி வசதி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும், அனைத்து பள்ளிகளிலும் மதியம் சத்தான உணவுடன் வாரம் 5 முட்டையும் வழங்கப்படுகிறது. மேலும், ஈஞ்சம்பாக்கம் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட இலவச நீட் பயிற்சி மையம் செயல்படுகிறது. இதுபோன்ற, ஏராளமான சலுகைகள் வழங்கப்படுவதால் 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர், அருகிலுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சேர்த்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி சதவீதம் பெற்று வரும் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் : கலெக்டர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Kanchipuram ,District Collector ,Kalaichelvi Mohan ,Adi Dravida ,Kanchipuram district ,Kanchipuram district… ,Adithi Dravidian ,Dinakaran ,
× RELATED ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு...