×

மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு

ஈரோடு: ‘மனசாட்சி இல்லாத மனிதர் மோடி. நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது’ என்று கூறி தமாகா தேர்தல் பொறுப்பாளர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஈரோடு, திண்டல் பகுதியை சேர்ந்தவர் சி.கவுதமன் (62). தமாகா நிர்வாகியான இவர், நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் நாமக்கல், கரூர், திருப்பூர் மாவட்ட தமாகா தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும், தமாகாவில் மாநில தேர்தல் முறையீடு குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில், கவுதமன் தமாகாவில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கூட்டணி கட்சியான பாஜவின் செயல்பாடுகள், அதன் தேர்தல் அறிக்கை, அணுகுமுறை இவையெல்லாம் ஜனநாயகத்துக்கு எதிராகவும், நாட்டு மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் ஆபத்தான அரசியல் ஆகவும் உள்ளது. சாமானியர்களுக்கு எதிரான செயல்பாடுகளும் ஆகும். ஒரு பிரதமர் எப்படி பேச வேண்டும் என்ற நெறிமுறை இல்லாதவர் மோடி.

தன்னையே கடவுள் அவதாரமாக மாய தோற்றத்தை நம்பும் ஒருவர், மணிப்பூர் கலவரத்தில் பெண்கள் பல நூறு பேர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமையை கண்டு நேரில் சென்று ஆறுதல் சொல்லாதவர், குஜராத்தில் பில்கிஸ் பானுவுக்கு அநீதி இழைத்த குற்றவாளிகள் வெளியே வந்து விடுதலை வெற்றியை கொண்டாடிய அரக்கர்களை கண்டிக்காதவர், ஆண்டுக்கணக்கில் போராடும் விவசாயிகளை கண்டு கொள்ளாதவர், பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆபத்தான நிலையிலும் உதவாத ஒரு மனிதரை மனசாட்சி உள்ளவர்களால் ஏற்க முடியாது.

நாடு சுதந்திரம் பெற 17 ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவையும், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக இந்த மண்ணில் ரத்தம் சிந்திய இந்திரா காந்தியையும் மோசமாக விமர்சிக்கும் மோடி கூட்டத்துடன் எப்படி கூட்டாளியாக இருக்க முடியும்? நாட்டின் சுதந்திரத்துக்காக சிறு துரும்பையும் எடுத்துப் போடாத, சிறைக்கு பயந்து வெள்ளையனிடம் கடிதம் கொடுத்த சங்பரிவார் கூட்டத்துடன் எப்படி முழுமையாக சங்கமிக்க முடியும்? இந்த நாட்டின், அனைத்து வளர்ச்சிக்கும், கட்டுமானத்துக்கும் யார் காரணம்? ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு வாய் கூசாமல் மோடியின் கூட்டம் பேசுவதை ஏற்பது எந்தவித அரசியல் அறம்? நாமும் ஒன்றாகத்தானே பயணித்திருக்கிறோம்? எனவே, சிந்தாந்தங்களை சிதறவிட்டு விட்டு சிந்திப்பது இயலாது. அடிப்படையான அரசியல் பண்புகளை விடமுடியாது. எனவே, இயக்கத்தில் இருந்துகொண்டு நெருஞ்சி முள்ளாக தலைவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தாமல், தமாகாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறுகிறேன். இது எனக்கு மிகவும் வருத்தமான முடிவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

The post மனசாட்சி இல்லாத மனிதர் மோடி என விமர்சனம் தமாகா தேர்தல் பொறுப்பாளர் கட்சியில் இருந்து திடீர் விலகல்: நாட்டுக்கு எதிராக பாஜ செயல்படுகிறது என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamaga ,BJP ,Erode ,Tamaka ,C. Gauthaman ,Dindal ,Dinakaran ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...