×
Saravana Stores

வைகாசி விசாக திருவிழா நிறைவு

 

திருச்செங்கோடு, மே 28: திருச்செங்கோட்டில், வைகாசி விசாகத்திருவிழா நிறைவு பெற்றதையடுத்து, அர்த்தநாரீஸ்வரர் பரிவாரத்துடன் திருமலைக்கு திரும்பினார். திருச்செங்கோட்டில், பிரசித்தி பெற்ற வைகாசி விசாகத்திருவிழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 17ம் தேதி ஆதிகேசவப் பெருமாள் கொடியேற்றம் நடந்தது. அன்றிரவு அர்த்தநாரீஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன், திருமலையிலிருந்து இறங்கி, அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். பின்னர், பல்வேறு சமூகத்தவரின் மண்டபக் கட்டளை நடந்தது. 22ம் தேதி அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விசாக நட்சத்திரத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளி, தொடர்ந்து மூன்று நாட்கள் தேரோட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருத்தேர் நிலை சேர்ந்தவுடன், வண்டிக்கால் உற்சவம், நடராஜர் தரிசனம், கொடி இறக்கம் ஆகியவை நடந்தன.

நேற்று அதிகாலை, நான்குகால் மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம், ருத்ராட்ச மண்டபத்தில் மாலை மாற்றி அர்த்தநாரீஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் திருமலை திரும்பினார். அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமியையும், பரிவார தெய்வங்களையும் வைத்து, ஆயிரம் படிகள் வழியாக பக்தர்கள் திருமலைக்கு ராஜகோபுர வாசல் வழியாகக் கொண்டு சென்றனர். நிகழ்ச்சியின் போது, கோயில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் உடனிருந்தனர்.

The post வைகாசி விசாக திருவிழா நிறைவு appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visakha Festival ,Tiruchengode ,Vaikasi Visakhatri Festival ,Arthanareeswarar ,Tirumala ,
× RELATED ஜிஎஸ்டியால் உருக்குலைந்த கிராமிய தொழில்கள்