×

பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 9.5 பவுன் நகை, ரூ70 ஆயிரம் கொள்ளை

ராசிபுரம், நவ. 6: ராசிபுரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து 9.5 பவுன் நகை மற்றும் ரூ70 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்த 2 பேர், தடுத்த மூதாட்டியை தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி கமலம்(61). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கணவர் இறந்த நிலையில் கமலம் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் முன்புறம் தனது விவசாய நிலத்தில் தினமும் வேலை செய்வது வழக்கம். நேற்று மதியம் வீட்டின் கதவை சாத்திவிட்டு, பயிர்களுக்கு நீர்பாய்ச்ச சென்றுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டின் வெளியே பைக்குடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த கமலம், வீட்டுக்கு விரைந்துள்ளார்.

அவரை கண்டதும் வெளியே நின்றிருந்த நபர் உஷாராக சத்தம் போட்டுள்ளார். அதனைக்கேட்டு வீட்டினுள் இருந்து மற்றொரு நபர் வெளியே வந்தார். பின்னர், இருவரும் பைக்கில் ஏறி தப்ப முயன்றனர். வீடு புகுந்து பொருட்களை திருடிச்செல்வதை அறிந்த கமலம், கூச்சலிட்டவாறு பைக்கின் பின்பக்க கம்பியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கமலத்தை சரமாரி தாக்கி கீழே தள்ளிவிட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச்சென்றனர். கமலத்தின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் தப்பி விட்டனர். இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 9.5 பவுன் நகை மற்றும் ரூ70 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 9.5 பவுன் நகை மற்றும் ரூ70 ஆயிரத்தை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பட்டப்பகலில் மூதாட்டியை தாக்கி 9.5 பவுன் நகை, ரூ70 ஆயிரம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Bhatapagal ,Namakkal District ,
× RELATED பொறியாளரிடம் ₹8.48 லட்சம் ஆன்லைன் மோசடி சைபர் கிரைமில் புகார்