×

ஜிஎஸ்டியால் உருக்குலைந்த கிராமிய தொழில்கள்

*சிக்கலில் காந்தி ஆசிரமம்

*உதவிக்கரம் நீட்ட எதிர்பார்ப்பு

திருச்செங்கோடு : ஒன்றிய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டியால், கிராமியத்தொழில்கள் நசிந்து வருகின்றன. திருச்செங்கோட்டில் விடுதலை போராட்டத்தின் பாசறையாகவும், வலிமையான கிராமிய பொருளாதாரத்தின் சின்னமாகவும் விளங்கிய காந்தி ஆசிரமம், தற்போது பொருளாதார சிக்கலில் தவித்து நலிந்து வருகிறது. உள்ளூர் மூலப் பொருட்களை கொண்டு, உள்ளூர் மக்களால் உற்பத்தி செய்யப்பட்டு, உள்ளூர் மக்களால் வாங்கப்படுவதே கிராமிய பொருளாதாரமாகும்.

இதனை நூற்றாண்டு விழா காணப்போகும், திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் செவ்வனே செய்து வந்தது. வேலை இல்லா திண்டாட்டமும் இதன் மூலம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 1925ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி, இதனை மூதறிஞர் ராஜாஜி நிறுவினார்.

இதற்கான நிலத்தை ரத்தின சபாபதி என்ற ஜமீன்தார் இலவசமாக அளித்தார். வேலை வாய்ப்பின்றி கங்காணிகள் மூலம் இலங்கை, மலேசியா போன்ற வெளி தேசங்களுக்கு சென்று இன்னல்படும் மக்களை தடுத்து, அவர்களுக்கு பஞ்சை கொடுத்து நூற்க செய்து, நூலை காந்தி ஆசிரமம் வாங்கிக் கொண்டது. இதனால் பல்லாயிரம் பேர் பசி பட்டினியிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.

கதர் குல்லா அணிந்து காந்தி ஆசிரமத்தை தொடங்கி வைத்தவர் தந்தை பெரியார். இலவங்காய் உடைத்தல், கதர் தயாரித்தல், ஊதுபத்தி செய்தல், இலவம் பஞ்சு கொண்டு மெத்தை, தலையணை தயாரித்தல், கைகளால் செய்யப்படும் காகிதம், சோப் தயாரித்தல், பர்னிச்சர் தயாரிப்பு, வேப்பம் புண்ணாக்கு தயாரித்தல், பட்டுப்புடவை தயாரித்தல் போன்ற கிராமிய தொழில்கள் மூலம், ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்றனர்.

இதனால் உள்ளூர் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்தது. கணவனை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் கிராமிய தொழில்கள் மூலம் பொருள் ஈட்டி, சொந்தக்காலில் நின்றனர். காந்தி ஆசிரமத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும், ஏறத்தாழ ஒரே மாதிரியான சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர போராட்ட வீரர்களின் பாசறையாகவும், மது ஒழிப்பின் மையமாகவும் செயல்பட்ட காந்தி ஆசிரமத்தில், மூதறிஞர் ராஜாஜி சுமார் 10ஆண்டுகள் தங்கி சேவை செய்தார். 10 அடிக்கு 10 அடி உள்ள அறையில் வாழ்ந்த ராஜாஜி, பின்னாளில் நூற்றுக்கணக்கான அறைகள் கொண்ட ராஜ்பவனுக்கு கவர்னர் ஜெனரலாக சென்றார். மதுவை ஒழிக்க மக்களிடம் பிரசாரம் செய்ய, மாட்டு வண்டியில் பெட்ரோமேக்ஸ் லைட்டுகளுடன் கிராமம் கிராமமாக ராஜாஜி சென்றார். இதற்காக தமிழ் மற்றும் ஆங்கில இதழ்களை அவர் வெளியிட்டு வந்தார்.

தொழுநோயாளிகளுக்கு இங்கு சிறப்பான சிகிச்சை டிபானே என்ற ஆங்கில பெண் டாக்டரால் அளிக்கப்பட்டது. காந்தி, நேரு, வல்லபாய் படேல் போன்ற தேசத்தலைவர்கள் இங்கு வருகை புரிந்துள்ளனர். இங்கு வருகை தந்த காந்தியடிகள் சர்வ மத பிரார்த்தனையில் ஈடுபட்ட கொடிகம்பம் புனிதமாக போற்றப்படுகிறது. தற்போது மூலப் பொருட்கள் வாங்க, போதிய பொருளாதார வசதி இல்லை. வங்கிகளிடம் கணிசமான அளவுக்கு கடன் உள்ளது.

இங்கு தயாராகும் சோப்புக்களை, ராணுவத்திற்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்து வந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுள்ளது. கைவினைஞர்கள் சுமார் 600 ஆக குறைந்து விட்டது. சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 16 விற்பனை நிலையங்கள் உள்ளன. இதுவரை காந்தி ஆசிரம பொருட்கள் விற்பனைக்கு வரியே கிடையாது. தற்போது ஜிஎஸ்டி அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவு ஆசிரமத்தின் தலையில் விழுந்த பெரிய இடியாகும்.

காந்தி ஆசிரமத்தில் வேளாண்மைக்காக தயாரிக்கப்படும் வேப்பம் புண்ணாக்கிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி உள்ளது. பர்னிச்சர், சோப், ஊதுபத்தி ஆகியவற்றிற்கு 18 சதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டி உள்ளது. தேன் மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சவீத ஜிஎஸ்டி போடப்படுகிறது. கதருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிச்சந்தையுடன் போட்டி போட முடியாத நிலைக்கு காந்தி ஆசிரமம் தள்ளப்பட்டு விட்டது. இதனால் விற்பனை சரிந்துள்ளது.

இந்திய நாட்டின் முக்கிய சின்னமாக விளங்கும் காந்தி ஆசிரமத்தை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டியது, ஒன்றிய அரசுகளின் கடமையாகும். அதற்கு ஆசிரமத்தை பொருளாதார சிக்கலிலிருந்து விடுவிக்க வேண்டும். ஜிஎஸ்டி வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். காந்தி ஆசிரம பொருட்களை, ஒன்றிய, மாநில அரசுகள் வாங்க வேண்டும்.

முன்பு போல ராணுவத்தற்கு ஆசிரம தயாரிப்பான தரமான சோப்பை கொள்முதல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகள் காலத்தின் கட்டாயமாகும். தேச விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியுமாகும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஜிஎஸ்டியால் உருக்குலைந்த கிராமிய தொழில்கள் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Ashram ,Tiruchengode ,Union Government ,Gandhi Ashram ,
× RELATED மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்...