×
Saravana Stores

24 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு

சேலம், மே 5: சேலம் மாவட்டத்தில் இன்று 24 மையங்களில் நடக்கும் நீட் தேர்வை, 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆண்டுதோறும் முக்கிய நகரங்களில் இதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான தேர்வு இன்று (5ம் தேதி) நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் நடப்பாண்டு 1.50 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த நீட் தேர்வை எழுதுகின்றனர்.

இவர்களுக்காக மாநிலம் முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுதுகின்றனர். இவர்களுக்காக, சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என மாவட்டம் முழுவதும் 24 இடங்களில் தேர்வு ைமயம் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சின்ன திருப்பதியில் உள்ள ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, செவ்வாய்பேட்டை, அயோத்தியாபட்டணம், அம்மாப்பேட்டை, கன்னங்குறிச்சி, கொண்டலாம்பட்டி ஆகிய இடங்களில் உள்ள வித்யாமந்திர் பள்ளி, நோட்டரி டேம், எமரால்டுவேலி, ஹோலிகிராஸ், சுவாமி, தாகூர் ஆகிய பள்ளிகளிலும், சேலம் சோனா கல்லூரி, சக்தி கைலாஷ், வைஸ்யா, வித்யாமந்திர் ஆகிய கல்லூரிகளிலும் என மொத்தம் 24 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, நேற்று சம்பந்தப்பட்ட தேர்வு மையங்களில், தேர்வர்களுக்கான குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு, கழிவறை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், வழிகாட்டி பலகை, அறை ஒதுக்கீடு, தேர்வர்களுக்கான இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி, மாலை 5.20 மணி வரை சுமார் மூன்றரை மணிநேரம் நீட் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கு 1 மணிநேரத்திற்கு முன்னதாகவே, தேர்வுக்கூடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். செல்போன், வாட்ச் உள்பட எந்தவித எலெக்ட்ரிக் பொருட்களையும் கொண்டு செல்ல கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை முறையாக பின்பற்றுவதுடன், உரிய நேரத்திற்கு வர வேண்டும் என தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post 24 மையங்களில் நீட் தேர்வு நடத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Salem ,MBBS ,BDS ,Dinakaran ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...