சேலம், மே 5:சேலம் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் இயங்கும் பேருந்துகளை வட்டார போக்குவரத்துத்துறை அதிகாரிகள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால், அத்தகைய வருடாந்திர ஆய்வை அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் முன்னிலையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் செய்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம், சேலம் உடையாப்பட்டி தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் ராஜேந்திரன், துணை மேலாளர் (வணிகம்) பாண்டியன் மற்றும் குழுவினர் அனைத்து தனியார் பள்ளி பேருந்துகளையும் இயக்கி பார்த்து ஆய்வு செய்தனர். இப்பணியை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:தனியார் பள்ளிகள் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்துத்துறை, காவல்துறை, பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து, இயக்குவதற்கு தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படுகிறது. அந்தவகையில், சேலம் மாவட்ட வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 335 தனியார் பள்ளிகளில் இயங்கிவரும் 2,123 பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் வரும் 15ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இன்று (நேற்று) தொடங்கிய ஆய்வில் 180 பள்ளி பேருந்துகள் பங்கேற்றன. அவற்றில் 17 வாகனங்களில் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப்பெட்டி, தீத்தடுப்பான், வேகக்கட்டுப்பாட்டு கருவி, சிசிடிவி கேமரா, அவசரகால வழி, பேருந்து படிக்கட்டுகளின் உயரம், காற்றோட்ட வசதி, கதவு, பிரேக்கின் தன்மை, பேருந்துகளில் இருக்கை அமைப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவீதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும்.
இத்தகைய அடிப்படை கட்டமைப்புகளில் குறைபாடுகள் இருப்பின், சரி செய்துவர கால அவகாசம் அளிக்கப்படும். குறிப்பாக, மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்படும்.
அதேபோன்று, மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு முழு உடற்பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. அந்த வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே வாகனத்தை இயக்கி, விபத்தில்லாத பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனை பள்ளி நிர்வாகங்களுக்கு தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, சேலம் ஆர்டிஓ அம்பாயிரநாதன், தாசில்தார் தாமோதரன், மோட்டார் வாகன ஆய்வாளர் (சேலம் கிழக்கு) மாலதி மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.
The post பள்ளி வாகனங்களில் குறைபாடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை appeared first on Dinakaran.