காஞ்சிபுரம், மே 5: காஞ்சிபுரம் அருகே சக தொழிலாளர்களுடன் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மாயமான தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பட்டேல் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (48). இவர், காஞ்சி ராஜகுளம் அருகில் உள்ள இலுப்பப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினந்தோறும் சுமார் 35 தொழிலாளர் கம்பெனி முன்பு தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று முன்தினம் சுந்தரமூர்த்தி உள்பட 35 தொழிலாளர்கள், கம்பெனி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிற்பகல் கடும் வெயில் கொளுத்தியதால், தொழிலாளர்கள் அனைவரும் ராஜகுளம் பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். அப்போது தொழிலாளர்கள் அனைவரும் குளித்துவிட்டு திரும்பும்போது சுந்தரமூர்த்தி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக காஞ்சிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாயமான சுந்தரமூர்த்தியை நேற்று முன்தினம் இரவு 7.30 மணி வரை தேடினர். இரவில் தேடுதல் பணியை தொடர முடியாததால், நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினர்.
பின்னர் காலை 8.45 மணிக்கு சுமார் 40 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கியிருந்த சுந்தரமூர்த்தியை சடலமாக மீட்டனர். இதனைத்தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் உடலை மீட்ட காஞ்சிபுரம் தாலுகா போலீசார், பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குளித்தில் சென்றபோது மாயமான தொழிலாளி சடலமாக மீட்பு appeared first on Dinakaran.