×
Saravana Stores

கடந்த ஒராண்டில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 208 பேர் கைது


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டமாக உருவாகி 4 ஆண்டுகள் நிறைவடைந்தநிலையில், கடந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலகத்தில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் நான்கு காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி இந்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரை 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 208 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதில், நியாய விலை கடைகளில் வழங்கும் அரிசி கடத்தியதில் 135 நபர்களும், எல்பிஜி காஸ் (மானியம்) விற்பனை செய்த 58 நபர்கள், டீசல் விற்பனை செய்ததால் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7 நபர்கள் உள்பட மொத்தம் 208 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் ரூ1.50 லட்சம் மதிப்பிலான 26 ஆயிரம் டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ75,600 மதிப்பிலான 84 எல்பிஜி காஸ் சிலிண்டர்கள், ரூ5 லட்சம் மதிப்பிலான 5,200 லிட்டர் டீசல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய பத்து 4 சக்கர வாகனங்கள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை, டீசல் விற்பனை, நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி போன்றவை கடத்தப்படுவது குறித்து 180059 95950 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post கடந்த ஒராண்டில் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 208 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,property crime ,Kanchipuram district ,
× RELATED மேல்மருவத்தூர் அருகே பைக் மீது கார்...