×
Saravana Stores

ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. இந்த, ஏரி மூலம் அப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 800 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் வசதி பெறுகிறது. இந்த ஏரியில் ஆண்டுதோறும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், ஏரியில் உள்ள மீன்பிடிக்க பொது ஏலம் விடப்படும். இதன்மூலம் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. தற்போது கோடைகாலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் ஏரியில் நாளுக்குநாள் நீர் குறைய தொடங்கி உள்ளது. ஏரியில் உள்ள மீன்களை பிடிக்க அதிகாரிகள் ஏலம் விட முன்வரவில்லை. இந்நிலையில் ராமானுஜபுரம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமு, கிராம நாட்டாமைதாரர்களுடன் தன்னிச்சையாக செயல்பட்டு நேற்று ஏலம் விடப்போவதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலை ஏரி அருகில் ஏலம் விடப்படுவதை கேட்டு சென்ற கிராம மக்கள் சிலர், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் ஏன் தன்னிச்சையாக நீங்கள் ஏலம் விடுகிறீர்கள் என ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மற்றும் ஆதரவாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமுவுக்கும், முருகன் என்பவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ராமு, முருகனை சரமாரியாக தாக்கியுள்ளார். காயமடைந்த முருகன், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் ராமு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கூறுகையில், ஏரியில் உள்ள மீன்களை பிடிக்கவோ, அல்லது தாமரைப் பூக்களை பறிக்கவோ ஏலம் நடத்த எங்களுடைய உயர் அதிகாரிகள் இதுவரை எந்த ஒரு தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் கிராம மக்களே தன்னிச்சையாக செயல்பட்டு ஏலம் விட முயன்றுள்ளனர். தற்போது எங்களுக்கு வந்த தகவலையடுத்து ஏலம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏலம் விடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.

The post ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Sriperumbudur ,Sriperumbudur Union ,Ramanujapuram Panchayat ,Public Works Department ,
× RELATED குண்டும், குழியுமான பென்னலூர் சாலை: சீரமைக்க கோரிக்கை