×
Saravana Stores

மதுராந்தகம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுராந்தகம், ஏப்.26: மதுராந்தகம் காவல் நிலையம் அருகே பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் நிலைய நெடுஞ்சாலை ஓரம் மதில் சுவர் அருகே, காவல் நிலைய வாயிலின் இருபுறங்களிலும் குற்ற வழக்குகள் மற்றும் விபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கார்கள், வேன்கள், மணல் கடத்தும் மாட்டு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் சேரும் குப்பை கூலங்கள் மற்றும் தூசிகளால் மிகுந்த சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி சாலையின் இரண்டு புறங்களிலும் ஏராளமான கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளில் பணிபுரிவோர் மற்றும் சாலைகளில் செல்வோருக்கு, இந்த வாகனங்களில் இருந்து காற்றில் பரவும் தூசிகள் மூலமாக சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனால், காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும், விஷ பூச்சிகள் தங்கும் கூடாரங்களாகவும் இந்த வாகனங்கள் மாறி வருவதாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அப்பகுதியில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த வாகனங்களில் மூலமாக போக்குவரத்து நெரிசலும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்றி மக்களுக்கு பாதிப்பு இல்லாத இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுராந்தகம் காவல் துறையினரை சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேட்டுக்கொள்கின்றனர். இதுகுறித்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கேட்டபோது, ‘இந்த வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். விரைவில் இந்த வாகனங்கள் அகற்றப்படும்’ என்றார்.

The post மதுராந்தகம் காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madhurantagam police station ,Madhurandakam ,Maduraandakam police station ,Chengalpattu district ,Madurandakam police station ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு