×
Saravana Stores

29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றி: ரொமாரியோ அமர்க்களம்

மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து நடப்பு சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது. வாங்கடே மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு), டாஸ் வென்ற கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பன்ட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். ரோகித் ஷர்மா, இஷான் கிஷன் இணைந்து மும்பை இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

ரோகித் 49 ரன் (27 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி அக்சர் சுழலில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த சூரியகுமார் டக் அவுட்டாகி வெளியேற, இஷான் 42 ரன் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி அக்சர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். திலக் வர்மா 6 ரன்னில் பெவிலியன் திரும்ப, கேப்டன் ஹர்திக் – டிம் டேவிட் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. ஹர்திக் 39 ரன் (33 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அன்ரிச் பந்துவீச்சில் பிரேசர் வசம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் டிம் டேவிட் உடன் இணைந்த ரொமாரியோ ஷெப்பர்ட் பவுண்டரியும் சிக்சருமாக விளாசித் தள்ள, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 234 ரன் குவித்தது. டேவிட் 45 ரன் (21 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ரொமாரியோ 39 ரன்னுடன் (10 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அன்ரிச் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் ரொமாரியோ 32 ரன் (4, 6, 6, 6, 6, 4, 6) சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மும்பை அணிக்கு கடைசி 8 பந்தில் 42 ரன் கிடைத்தது.

டெல்லி பந்துவீச்சில் அன்ரிச், அக்சர் தலா 2, கலீல் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 235 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கேப்பிடல்ஸ் களமிறங்கியது. பிரித்வி, வார்னர் இணைந்து துரத்தலை தொடங்கினர். வார்னர் 10 ரன் எடுத்து ரொமாரியோ பந்துவீச்சில் ஹர்திக் வசம் பிடிபட்டார். பிரித்வி – அபிஷேக் படேல் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது.

பிரித்வி 66 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), அபிஷேக் 41 ரன் (31 பந்து, 5 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினர். ரிஷப் பன்ட் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, டெல்லி அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. எனினும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிய… ஆட்டம் விறுவிறுப்பானது. அக்சர் 8 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கோட்ஸீ வீசிய கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றிக்கு 34 ரன் தேவைப்பட்ட நிலையில்…

லலித் (3), குஷக்ரா (0), ரிச்சர்ட்சன் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து, 29 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கடைசி வரை போராடிய ஸ்டப்ஸ் 71 ரன்னுடன் (25 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை பந்துவீச்சில் கோட்ஸீ 4, பும்ரா 2, ரொமாரியோ 1 விக்கெட் வீழ்த்தினர். மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்து புள்ளிக் கணக்கை தொடங்கியது. ஆல் ரவுண்டராக அசத்திய ரொமாரியோ ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post 29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்சுக்கு முதல் வெற்றி: ரொமாரியோ அமர்க்களம் appeared first on Dinakaran.

Tags : Mumbai Indians ,Delhi ,Romario Amarkalam ,Mumbai ,Delhi Capitals ,Whangade Stadium ,Capitals ,Dinakaran ,
× RELATED பட்டாசு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதா?: டெல்லி ஐகோர்ட் கேள்வி