புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை கோச் ஆக பதவியேற்றது முதல் அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வருவதால் கவுதம் காம்பீர் நீக்கப்பட்டு, விவிஎஸ் லஷ்மண் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கியவரும், முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர், இந்தாண்டு ஜூலை 6ம் தேதி தலைமை கோச் ஆக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் நியமிக்கப்பட்டது முதல் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது.
சமீபத்தில் இலங்கை சென்ற, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 27 ஆண்டுக்குப் பின் முதல் முறையாக, ஒரு நாள் தொடரை இழந்து, ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில், 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்து வாஷ்அவுட் ஆனது. கவுதம் காம்பீர் தலைமை கோச் ஆனது முதல், இந்திய அணி தொடர் தோல்விகளை தழுவி வருவதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. இரு அணிகள் இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடக்க உள்ளன. முதல் போட்டி வரும் 22ம் தேதி துவங்க உள்ளது. காம்பீருக்கு ஆசிட் டெஸ்டாக கருதப்படும் இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படா விட்டால், தலைமை கோச் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்றும் அவருக்கு பதில், முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் நியமிக்கப்படலாம் என்றும், கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.
The post அடுத்தடுத்து தொடர் தோல்விகளால் தலைமை கோச் பதவியை பறிகொடுப்பாரா காம்பீர்..? appeared first on Dinakaran.