புதுடெல்லி: சமீபத்தில் முடிந்த நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், இந்திய அணி படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனதால் அதிர்ச்சி அடைந்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தோல்விக்கான காரணங்கள் குறித்து 6 மணி நேரம் தீவிரமாக அலசி ஆராய்ந்தது. நியுசிலாந்து நாட்டு கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்திய அணியுடன் 3 டெஸ்ட் போட்டிகளில் மோதிய அந்த அணி சிறப்பாக செயல்பட்டது. மூன்று போட்டிகளிலும் சொதப்பிய இந்திய அணி படுதோல்வியை தழுவி ஒயிட் வாஷ் ஆனது. இது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டும் அல்லாமல் பிசிசிஐயையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று முன்தினம் பிசிசிஐயின் சிறப்புக் கூட்டம் நடந்தது. இதில், பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா, தலைமை கோச் கவுதம் காம்பீர், தேர்வுக்குழுவின் தலைவர் அஜித் அகர்கர், கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், நியுசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின்போது இந்திய அணியின் நிர்வாகக் குழு எடுத்த சில முடிவுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முந்தைய கிரிக்கெட் கோச் ராகுல் டிராவிட் போல் அல்லாது, தற்போதைய கோச் கவுதம் காம்பீரின் கோச்சிங் ஸ்டைல், அதை இந்திய வீரர்கள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மூன்றாவது டெஸ்டின்போது, துணை கேப்டனும் நட்சத்திர பந்து வீச்சாளருமான பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டது ஏன் என்ற கேள்வியும் கூட்டத்தில் எழுப்பப்பட்டது.
இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘பெரிய தோல்வி அடையும்போது, இத்தகைய ஆய்வுக் கூட்டம் நடப்பது இயல்பே. அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதற்கான திட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது’ என்றன.
The post நியுசி.யுடனான தொடரில் ஒயிட் வாஷ் ஆனதால் அதிர்ச்சி: பிசிசிஐ 6 மணி நேரம் தீவிர ஆய்வு appeared first on Dinakaran.