ஏற்காடு, மார்ச் 20: தமிழகம் முழுவதுமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏற்காடு மலை பகுதியில் உள்ள மரங்களில் இலைகள் காய்ந்துள்ளது. கடந்த 15 நாட்களாக ஏற்காட்டில் உள்ள வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் ஏற்காடு மலைப்பாதையில் கருங்காலி கிராமம் வனப்பகுதியில் மரங்கள் தீ பிடித்து எரியத்தொடங்கியது. மூங்கில் மரங்கள் காய்ந்து கிடந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனப்பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுத்தீ அதிகரித்ததால் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் உள்ள மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமானது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இருந்த போதிலும் நடு வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டு தீயை அணைக்க முடியவில்லை. தீ மீண்டும் சாலையோரத்தில் உள்ள வன பகுதியில் உள்ள மரங்களை பற்றி ஏறிய தொடங்கியுள்ளது. இதனால் மலைப்பகுதியில் மீண்டும் தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. தீயணைப்பு வாகனம் செல்ல முடியாததால் காட்டு தீயை அணைக்க முடியாததால் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
The post ஏற்காடு மலைப்பாதையில் 3 நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ appeared first on Dinakaran.