×

கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா – ருதுஜா தங்கம் வென்று சாதனை

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ருதுஜா போசலே இணை தங்கம் வென்று சாதனை படைத்தது. டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகள் கை நழுவி ஏமாற்றமளித்த நிலையில், இரட்டையர் பிரிவில் தலா ஒரு தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்று அசத்தினர். கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா (43 வயது) – ருதுஜா போசலே (27 வயது) இணை 2 நாட்களுக்கு முன்பு காலிறுதியில் வென்றதும் பதக்க வாய்ப்பு உறுதியானது. நேற்று முன்தினம் நடந்த அரையிறுதியில் தைவானின் யூ-ஹசியூ ஹசு – ஹோ-சிங் சாங் இணையை 6-1, 3-6, 10-4 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய இணை பைனலுக்கு முன்னேறியது. அதன் மூலம் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளி கிடைப்பது உறுதியானது.

தொடர்ந்து நேற்று நடந்த பைனலிலும் போபண்ணா – ருதுஜா இணை, தைவானின் சேர்ந்த சுங்-ஹாவோ ஹுவாங் – என்-சுவோ லியாங் ஜோடியை எதிர்கொண்டது. தைவான் ஜோடி முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் வசப்படுத்தி முன்னிலை பெற்றது. அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடிய இந்திய ஜோடி 6-3 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு தரப்பினரும் விடாப்பிடியாகப் போராடியதால் டை பிரேக்கர் வரை இழுபறி நீடிக்க, உறுதியுடன் விளையாடிய போபண்ணா – ருதுஜா ஜோடி 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்துடன் தங்கப் பதக்கத்தையும் முத்தமிட்டது.

முன்னதாக, ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் – சாகேத் மைனேனி இணை 4-6, 4-6 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஹ்சு யு – ஜேசன் ஜங் ஜோடியிடம் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 2000க்கு பிறகு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளின் டென்னிஸ் பிரிவில், இந்தியா இந்த முறைதான் வெறும் 2 பதக்கங்களுடன் திரும்புகிறது. 2002 பூசன் போட்டியில் 4 பதக்கம், 2006 தோஹாவில் 4, 2010 குவாங்சோ போட்டியில் 5, 2014 இன்சியானில் 5, 2018 ஜகார்தாவில் 3 பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடதக்கது.

* விடைபெற்றார் போபண்ணா
ஆசிய விளையாட்டு போட்டியுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகப் போவதாக போபண்ணா அறிவித்திருந்த நிலையில், அவர் தங்கப் பதக்கத்துடன் விடைபெற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது தற்போது நிறைவேறி உள்ளது. ஓய்வை அறிவித்த பிறகு போபண்ணா கிராண்ட் ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் இரட்டையர் பிரிவில் 2வது இடம் பிடித்தார். அடுத்து டேவிஸ் கோப்பை போட்டியில் மொரோக்காவை வீழ்த்திய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். தனது கடைசி போட்டியான ஆசிய விளையாட்டு போட்டியிலும் தங்கம் வென்று பிரியா விடை பெற்றுள்ளார்.

* உற்சாக செல்ஃபி
கலப்பு இரட்டையர் பிரிவு டென்னிசில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த போபண்ணா – ருதுஜா, ஆண்கள் இரட்டையர் டென்னிசில் வெள்ளி வென்ற ராம்குமார் – மைனேனி ஆகியோர் ஹாங்சோ டென்னிஸ் அரங்கில் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

The post கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா – ருதுஜா தங்கம் வென்று சாதனை appeared first on Dinakaran.

Tags : Bopanna - Ruduja ,Hangzhou ,India ,Rogan Bopanna-Ruduja Bhosale ,Asian Games ,Bopanna-Ruduja ,Dinakaran ,
× RELATED மலேசிய இணையை வீழ்த்தி திரீசா-காயத்ரி...