×

கேரளாவில் பரபரப்பு மார்க்சிஸ்ட் பிரமுகரை சுட்டுக் கொன்ற பாஜக உறுப்பினர்

திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் பிரமுகரை பாஜக உறுப்பினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு அருகே உள்ள பள்ளிப்பாடு நீண்டூர் பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது56). மார்க்சிஸ்ட் பிரமுகராவார். அவரது உறவினர் பிரசாத்(50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சோமனின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று மாலை சோமன் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பிரசாத், தனது வீட்டில் வைத்திருந்த ஏர் பிஸ்டலை எடுத்துவந்து சோமனை நோக்கி இருமுறை சுட்டிருக்கிறார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சோமன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், ஆஸ்பத்திரிக்கு வந்து சோமனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது உறவினர்களான சோமன் மற்றும் பிரசாத்துக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், நேற்றும் தகராறு நடந்ததாகவும், அதில் ஆத்திரமடைந்து பிரசாத் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து பிரசாத் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பிரசாத் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர் சோமனை கொன்றிருப்பதாகவும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆலப்புழாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கேரளாவில் பரபரப்பு மார்க்சிஸ்ட் பிரமுகரை சுட்டுக் கொன்ற பாஜக உறுப்பினர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kerala ,Thiruvananthapuram ,Haripad ,Alappuzha district ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...