கராச்சி: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியில், தையப் தாஹிருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.ஐசிசி உலக கோப்பை ஒருநாள் தொடருக்கு முன்னோட்டமாக அமைந்துள்ள ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் ஆக.30ம் தேதி தொடங்கி செப். 17 வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 17 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றிருந்த தையப் தாஹிர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.
எனினும், ரிசர்வ் வீரராக தையப் தாஹிர் அணியுடன் பயணிப்பார் என்று பாக். கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியுடன் இலங்கையில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை, பாகிஸ்தான் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் அந்த அணி மிகுந்த உற்சாகத்துடன் ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. கொழும்புவில் நேற்று முன்தினம் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 59 ரன் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தி ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.
அந்த போட்டியில் பாகிஸ்தான் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன் குவித்தது. கேப்டன் பாபர் 60, ரிஸ்வான் 67, ஆஹா சல்மான் 38*, முகமது நவாஸ் 30, பகர் ஸமான் 27 ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய ஆப்கான் 48.4 ஓவரில் 209 ரன்னுக்கு சுருண்டது. முஜீப் 64, ஷாஹிதுல்லா 37, ரியாஸ் ஹஸன் 34 ரன் எடுத்தனர். பாக். பந்துவீச்சில் ஷதாப் கான் 3, ஷாகீன் அப்ரிடி, பாகீம் அஷ்ரப், முகமது நவாஸ் தலா 2, ஆஹா சல்மான் 1 விக்கெட் வீழ்த்தினர். பாக். அணியின் ரிஸ்வான் ஆட்ட நாயகன் விருதும், இமாம் உல் ஹக் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.இந்த வெற்றியால், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆசிய கோப்பையில் நாளை மறுநாள் முல்தானில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதுகின்றன.
The post ஆசிய கோப்பை கிரிக்கெட் பாகிஸ்தான் அணியில் ஷகீல் appeared first on Dinakaran.