×

நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு; ஐகோர்ட் பதிவாளர் ஆணையை திரும்பப் பெறுக..மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்..!!

சென்னை: நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உயர்நீதிமன்ற பதிவாளர் ஆணையை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தலைவர்களின் படங்களை நீக்க வேண்டும் என அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கு சென்னை, உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், உயர்நீதிமன்ற பதிவாளரின் சுற்றறிக்கை மூலமாக பல உயர்நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருப் படங்களை வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்த வேண்டுகோள் மறுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருச்சிலை இதன் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்ட முதன்மை நீதிபதி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படம் நீதிமன்றங்களில் இடம்பெறக் கூடாது என்ற புதிய போக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும் என எச்சரித்துள்ள வைகோ, மற்ற தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தும் ஏற்கதக்கது அல்ல என தெரிவித்துள்ளார். எனவே, புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் உயர்நீதிமன்ற பதிவாளரை வலியுறுத்தியுள்ளார்.

The post நீதிமன்றங்களில் தலைவர்கள் படம் வைக்க புதிய கட்டுப்பாடு; ஐகோர்ட் பதிவாளர் ஆணையை திரும்பப் பெறுக..மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : iCort ,Secretary General ,Vaigo ,Chennai ,Chief Secretary ,Vaiko ,iCourt ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...