×

மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு பேரணி; டெல்லி எல்லையில் போலீஸ் குவிப்பு: கூடாரங்கள், ரேஷன் பொருட்கள் எடுத்து செல்ல தடை

புதுடெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ேபரணி இன்று நடப்பதால் டெல்லி எல்லையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து வாகனங்களில் கூடாரங்கள், ரேஷன் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷனை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவரை கைது செய்யக் கோரியும் கடந்த 2 வாரங்களாக டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், அரியானா போன்ற வட மாநிலங்களைச் சேர்ந்த ‘காப்’ பஞ்சாயத்துத் தலைவர்கள் (விவசாய அமைப்புகள்) இன்று ஜந்தர் மந்தர் நோக்கி பேரணியாகச் சென்று, அங்கு போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அதேநேரம் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க, போராட்டம் நடைபெறும் இடங்களிலும், டெல்லி எல்லைகளிலும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

டெல்லி பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘இன்று டெல்லியை நோக்கி ‘காப்’ பஞ்சாயத்து பேரணி நடப்பதால், காவல்துறை போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. டெல்லிக்குள் வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. எந்தவொரு வாகனத்திலும் கூடாரங்கள், ரேஷன், பிற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அது பறிமுதல் செய்யப்படும். அவை டெல்லிக்குள் அனுமதிக்கப்படாது’ என்றனர்.

முன்னதாக நேற்று அரியானா மாநிலம் மெஹாமில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பிகேயு (கிசான் சர்க்கார்) பொதுச் செயலாளர் வீரேந்தர் சிங் ஹூடா கூறுகையில், ‘மல்யுத்த வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் வகையிலும் எங்களது பேரணி அமையும். மேலும் ஜந்தர் மந்தரில் கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும். இதுகுறித்து நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

The post மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு ஆதரவு பேரணி; டெல்லி எல்லையில் போலீஸ் குவிப்பு: கூடாரங்கள், ரேஷன் பொருட்கள் எடுத்து செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Delhi border ,New Delhi ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...