×

ஆண்டிபட்டி பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் பைப் பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ள சாலைகள் பல மாதங்களாகியும் சீரமைப்புப் பணிகள் செய்யாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகம் ஜல்ஜீவன் திட்டத்திற்காக சேதமடைந்த சாலைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 30 கிராம ஊராட்சிகள் உள்ளனர். இந்த கிராம ஊராட்சிகளில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராம பகுதிகளில் வசிக்கும் மக்கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தவிர மானாவாரி பயிர் சாகுபடி முக்கிய பங்களிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அணைக்கரைப்பட்டி, புள்ளிமான்கோம்பை, டி.புதூர், ரெங்கசமுத்திரம்,‌ நாச்சியார்புரம், பாலக்கோம்பை‌, அனுப்பப்பட்டி, மறவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குன்னூர் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் வைகை ஆற்று தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளில் ஆற்றுத்தண்ணீர் இல்லாததால் ஊராட்சி நிர்வாகத்தினர் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் தமிழக அரசு வைகை அணையில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஆண்டிபட்டி, ஒன்றியம் கடமலை-மயிலை ஒன்றியம் உள்ளிட்ட 250 கிராமங்களுக்கு வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஆய்வு பணிகள் நடைபெற்றது.

ஆய்வு பணிகள் முடிந்த நிலையில் இந்த திட்டத்திற்கு ரூ.162 கோடி 42 லட்சம்‌ நிதியே மாநில‌ அரசு‌ ஒதுக்கீடு செய்தது. ‌கடந்த 2020ம் ஆண்டு புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. காலம் மாற்றம்‍, அதிக செலவு காரணமாக மாநில அரசு இந்த திட்டத்திற்கான நிதியே‌ ரூ.167.50 கோடியாக மாற்றப்பட்டது.

இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசு 2019ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ஜல் ஜீவன் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது 2024ம் ஆண்டில் அனைத்து கிராம குடும்பங்களுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஜல் ஜீவன் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து கிராமங்களுக்கும் அவர்களின் வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் குழாய் பைப்புகள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவதில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள குன்னூர் கூட்டு குடிநீர் திட்டம், ஆண்டிபட்டி-சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம், அரப்படிதேவன்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் புதிதாக வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் திட்டத்தின் மூலமும் ஜல் ஜீவன் திட்டத்திற்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணியால் பல்வேறு சாலைகள் சேதமடைந்து கிடைக்கிறது. தற்போது புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் பேவர் பிளாக் சாலைகள் குழாய் பதிப்பதற்காக நடுவில் பள்ளம் தோண்டி பதிக்கப்பட்டு வருகிறது.

இதனால் சாலைகள் சேதம் அடைந்து காணப்படுவதுடன் போக்குவரத்திற்கும் சிரமமாக உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர். ஏற்கனவே வைகை அணையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக கிராம சாலையோரத்தில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதித்து வருவதால் தார்ச்சாலைகள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளது. இதே போல் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளும் சேதமடைந்து ஜல்ஜீவன் திட்டத்தில் கிராம பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்து இருப்பதால் தமிழக அரசுக்கு செலவுகள் அதிகரித்துள்ளது.

The post ஆண்டிபட்டி பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படுமா? வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Jal ,Antipati ,Andipati ,Jal Jeewan ,Antibati Union ,Jal Jeevan ,Antipatty ,Dinakaran ,
× RELATED சாலை சீரமைப்பு பணி தீவிரம்