*நகராட்சி ஆணையர் ஆய்வு
திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் ரூ.7 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி ஆய்வு செய்தார்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24இன் கீழ் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மேம்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அது வரை பொதுமக்களுடைய நலன் கருதி திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட திருவாரூர் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கின் எதிர்புறம் ஒரு தற்காலிக பேருந்து நிலையமும் திருவாரூர் சாலையில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையொட்டி ஒரு தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் பெட்ரோல் பங்குக்கு எதிர்ப்புறம் உள்ள பேருந்து நிலையத்தில் வேதாரண்யம் மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகளும் மன்னார்குடி வழியாக வரக்கூடிய பேருந்துகளும் இயக்கப்படும்.
கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் திருவாரூர் மார்க்கமாக வரக்கூடிய பேருந்துகள் நாகப்பட்டினத்தில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் பட்டுக்கோட்டையில் இருந்து வரக்கூடிய பேருந்துகள் கடந்த ஆண்டு மே 12 தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஆணையர் கிருத்திகா ஜோதி, பொறியாளர் வசந்தன் ஆகியோர் பார்வையிட்டனர்.
