புதுடெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை கண்டித்து, பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட ராகுல், பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. கல்வித் துறையின் குளறுபடிகளுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் அதிதீவிரமடைந்துள்ளது.
தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகள், பள்ளி பொதுத் தேர்வுகளில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளைத் தொடர்ந்து, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி போராட்டம் மேற்கொண்ட போது, டெல்லி போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் மாணவர்களை விரட்டி அடித்தனர்.
இதில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 2வது நாளாக நேற்று முடங்கின.
இதைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மற்றும் எம்பி பிரியங்கா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள், எண்: 7, லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்த பேரணியாக புறப்பட்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார், கேரள முதல்வர் வி.டி.சதீசன் மற்றும் பல காங்கிரஸ் எம்பிக்களும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி சுப்ரியா சுலே உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பிரதமர் மோடி பதவி விலகக் கோரி முழக்கமிட்டனர். அப்போது, ஒன்றிய அரசு மக்களின் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக குற்றம்சாட்டிய எம்பிக்கள் அதற்கு அடையாளமாக பிளாஸ்டிக் டேக் மூலம் கைகளை கட்டிக் கொண்டு எதிர்ப்பு கோஷமிட்டனர். ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், ‘‘மாணவர்கள் மீதான தாக்குதல் என்பது ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் மீதான தாக்குதல்.
எந்த பதிலையும் அளிக்காமலும், எந்த விளைவுகளையும் சந்திக்காமலும் தப்பித்துவிடலாம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். ஆனால் அவரால் முடியாது; இம்முறை அது நடக்காது. மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு தேசபக்தி மிக்க இந்தியரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் – பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடைபெறும் தர்ணா போராட்டத்தில் எங்களுடன் இணையுங்கள். இந்திய மாணவர்களின் குரல் புறக்கணிக்கப்படாது’’ என அழைப்பு விடுத்தார்.
மாணவர்களுக்கு அரசு நீதி வழங்கும் வரையிலும், தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரையிலும் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் எம்பி பவன் கேரா தெரிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. போராட்டம் தொடங்கிய 20 நிமிடத்திற்குப் பிறகு, ஒன்றிய அரசு தரப்பில் பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனுடன் வந்து ராகுல் காந்தியுடன் சமரசம் பேசினார். ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதையடுத்து, தர்ணா போராட்டத்தில் இருந்து எம்பிக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். டெல்லி போலீசாரும் குவிக்கப்பட்டனர். முதலில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, மக்களவையின் காங்கிரஸ் கொறடா கே. சுரேஷ் மற்றும் காங்கிரஸ் எம்.பி. சுக்பிந்தர் ரந்தாவா உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டனர். மல்லிகார்ஜூன கார்கேவும் போராட்ட களத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார்.
இறுதியாக, ராகுல் காந்தியை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர். கூட்டத்தின் நடுவே தரையில் படுத்துக் கொண்ட ராகுல் காந்தி எழுந்த வர மறுத்ததால் அவரது காலை பிடித்து குண்டுகட்டாக தூக்கி போலீசார் வாகனத்தில் ஏற்றினர். அதே போல பிரியங்கா காந்தியும் வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி உள்ளே தள்ளப்பட்டார். சில மணி நேரத்தில் பிரதமர் இல்லத்திற்கு முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
மாணவர்கள் மீதான அத்துமீறலைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் இல்லத்திற்கு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம், ஜந்தர்மந்தரில் மீண்டும் மாணவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நேற்று தொடர்ந்தனர். மாணவர்களின் போராட்டம் நேற்று 32வது நாளை எட்டியது.
நேற்றைய போராட்டத்தின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ் கே.மாணி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் ஒன்றிய அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
* மாற்றி மாற்றி பேசுகிறார் ராகுல்
ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், ‘‘காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் அக்பர் சாலைக்கு அருகில் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மூத்த தலைவர்கள் குழுவின் கண்ணியத்தை கருத்தில் கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எங்களை அனுப்பி வைத்தது.
இப்பகுதி போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அல்ல என்பதாலும், இங்கு அமர்ந்து போராட்டம் நடத்துவது பொதுமக்களுக்குக் கணிசமான சிரமத்தை ஏற்படுத்துவதாலும், போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியிடம் கோரிக்கை விடுத்தேன். நீட் வினாத்தாள் கசிவு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு ஒப்புக்கொண்டால், உடனடியாக போராட்டத்தை முடித்துக்கொள்வதாகத் ராகுல் காந்தி நிபந்தனை விதித்தார்.
சில நிமிடங்களிலேயே, அரசின் உயர்மட்டத் தலைவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு, அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவருக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் உடனே ராகுல் காந்தி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்தும் உறுதிபடுத்த வேண்டுமென்றார். அவரைப் போன்ற ஒரு மூத்த தலைவர் தனது வார்த்தையிலிருந்து இவ்வளவு விரைவாகப் பின்வாங்குவது அவருக்குப் பொருந்தாது என்று பணிவுடன் விளக்க முயன்றபோது, அது தனது தனிப்பட்ட உரிமை என்றார்.
ராகுல் காந்தி போன்ற ஒரு மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஒருவர் தமது வார்த்தையை மீறுவது துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஜனநாயகத்தின் ஒவ்வொரு நெறிமுறைக்கும் முரணானது. நீட் தேர்வு மற்றும் அது தொடர்பான இயக்கம் குறித்த அனைத்துப் பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்றார்.
* எங்கள் நேரத்தை வீணடித்தது அரசு
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே ஜந்தர்மந்தரில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசு எங்கள் நேரத்தை வீணடித்தது. பேச்சுவார்த்தைக்காக எங்கள் பிரதிநிதிகளை அழைத்தனர். ஆனால் அவர்களின் செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டனர். அமைச்சர் நட்டாவின் வீட்டில், அவர்களை வீட்டு சிறையில் வைத்தனர். 5 மணி நேரம் காக்க வைத்து அனுப்பி வைத்தனர்.
ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு மறுபுறம் மாணவர்கள் மீது தடியடி நடத்தினார்கள்’’ என்று குற்றம்சாட்டினார். கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகளை சந்தித்த ஒன்றிய அமைச்சர் நட்டா, அரசின் தலைமை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும் எனக்கூறி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
* ராகுலின் மூக்கில் ரத்தம் கசிந்தது
ராகுல் காந்தியை போலீசார் கைது செய்த போது அவரது மூக்கில் ரத்தம் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்ட களத்தில் இருந்து வெளியேற மறுத்த ராகுல் காந்தியை போலீசார் குண்டுகட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றினர். அப்போது ராகுல் காந்தி மூக்கில் காயமடைந்தார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்தபடி வேனில் ஏற்றப்பட்ட அவர் மாடல் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்பட்டதில் போராட்டத்தில் பங்கேற்ற பல எம்பிக்களுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
* மோடி, அமித்ஷா பதவி விலக வேண்டும்
போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போது பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறுகையில், ‘‘இது குண்டர் கும்பலின் செயல், அப்பட்டமான ரவுடித்தனம். அதிகார திமிரின் உச்சம். எம்பிக்களுக்கே இந்த நிலை என்றால் மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்’’ என்றார். போலீசார் தங்களை கொடூரமான முறையில் தடுத்து வைத்ததாக கே.சுரேஷ் குற்றம்சாட்டினார்.
மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‘‘கோழைத்தனமான சர்வாதிகார போக்குடைய இந்த அரச, தடியடி மற்றும் வன்முறையை பயன்படுத்துவதற்கு பதிலாக மாணவர்களுக்கு பதிலளித்திருக்க வேண்டும். மோடி-அமித்ஷா ஜோடி நமது இளைஞர்களுக்கு இழைத்த அநீதிக்கான குற்றவாளிகள். அவர்கள் பதவி விலகியே தீர வேண்டும்’’ என்றார்.
