×

சிக்கிம் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு 10 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்பு: மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிமில் சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.  சிக்கிமின் நாம்ச்சி மாவட்டத்தில் ஜொலுங்கே பகுதியில் சமர்துங் என்ற இடத்தில் டீஸ்டா நிலை 6 நீர்மின்திட்டத்திற்கான சுரங்கப்பாதை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென சுரங்கப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையின் நுழைவுவாயில் முழுவதும் பாறைகளாலும், மண் குவியல்களாலும் அடைப்பட்டது.

இதில் 25 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்டனர். நீண்ட நேரம் அடைப்பட்டிருந்த நிலையில் சுரங்கப்பாதையில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகம், சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், சிக்கிம் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மற்றும் பக்யோங் மற்றும் சிலிகுரியை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள் மற்றும் பிற சிறப்பு அமைப்புகள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன.

சுரங்கத்திற்குள் வாயு கசிவு ஏற்பட்டதால் மீட்பு பணிகள் சவாலானதாக அமைந்தது. நேற்று காலை 9.30 மணி வரை 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அடையாளம் காணப்படாத மூன்று உடல்கள் சிங்டம் மாவட்ட மருத்துவமனை மற்றும் எஸ்டிஎன்எம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட 7 பேரில் நான்கு பேர் மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரியை சேர்ந்த தொழிலாளர்கள்.

மேலும் உயிரிழந்த 3 தொழிலாளர்களில் தலா ஒருவர் அசாம், பஞ்சாப், உத்தரகாண்டை சேர்ந்தவர்கள். சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்து முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறுகையில், ” 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் ” என்றார்.

Tags : Sikkim ,Gangtok ,Teesta ,Samardung ,Jolunge ,Namchi district ,
× RELATED மாணவர்கள் மீது போலீஸ் தடியடியை...