×

பிரதமர் இல்லம் முன் போராட்டம்: ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்திற்கு வெளியே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து முக்கியத் தலைவர்களைக் கைது செய்துள்ளது.

மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை மற்றும் கல்வித் துறை குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது, மாணவர்கள் கைது செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கைகளில் கைவிலங்குகளை அணிந்து அடையாள எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், தலைவர்கள் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர்.

இதையடுத்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அனைவரையும் டெல்லி காவல்துறை கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அப்புறப்படுத்தியது. கைது செய்யப்பட்டபோது ஆவேசமாகப் பேசிய ராகுல் காந்தி, “மோடி அரசு தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தினாலும் மாணவர்களுக்கான இந்த போராட்டம் நிற்காது; அரசு கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, காயமடைந்த மாணவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி, மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியதற்குப் பொறுப்பேற்று பிரதமரும், ஒன்றிய அமைச்சர்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Tags : House ,Rahul Gandhi ,Delhi ,Tarna ,Narendra Modi ,Department of Education ,
× RELATED ஆந்திராவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு...