×

இன்று ட்ரீம் ரன்னர் மாரத்தான் போட்டி; காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
சென்னை ரன்னர்ஸ் அமைப்பால் இன்று காலை 4 மணிக்கு ட்ரீம் ரன்னர் மாரத்தான் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் 21 கி.மீ மற்றும் 10 கி.மீ ஆகிய பிரிவுகளில் ஓட்டப்பந்தயம் நடைபெற உள்ளது. இப்பந்தயம் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை (ஆல்காட் பள்ளி) ஆகிய இடங்களிலிருந்து தொடங்கி, தீவுத்திடல் வந்தடையும் வகையில் (காமராஜர் சாலை, மெரினா லூப் சாலை, டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, திரு.வி.க. பாலம், அடையாறு பாலம் சர்வீஸ் சாலை, எம்.எல். பூங்கா, பெசன்ட் அவென்யூ, 5-வது அவென்யூவில் இடது புறம் திரும்பி, எலியட்ஸ் நடை பாதை வலது புறம் திரும்பி போலீஸ் பூத் வரை சென்று ‘யு-டர்ன்’ எடுத்து தீவுத்திடல் வந்தடைதல்) திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி, பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் அதிகாலை 3 மணி முதல் 8 மணி வரை பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, காமராஜர் சாலையில், போர் நினைவுச் சின்னத்திலிருந்து காந்தி சிலை நோக்கிய வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது, ஆனால் காந்தி சிலையிலிருந்து தொழிலாளர் சிலை நோக்கிய வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படும். ராஜாஜி சாலையிலிருந்து தொழிலாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை போர் நினைவுச் சின்னம் சந்திப்பில் கொடிக்கம்ப சாலை மற்றும் வாலாஜா பாயின்ட் வழியாக திருப்பி விடப்படும். அண்ணா சிலையிலிருந்து தொழிலாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் பெல்ஸ் சாலை மற்றும் பாரதி சாலை வழியாகத் திருப்பி விடப்படும். பாரதி சாலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை பாரதி சாலை-வி.ஆர். பிள்ளை தெரு சந்திப்பில் டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பு மற்றும் மயிலாப்பூர் வழியாக திருப்பி விடப்படும்.

திரு.வி.க. பாலத்திலிருந்து டாக்டர் டி.ஜி.எஸ். தினகரன் சாலை மற்றும் சாந்தோம் ஹை ரோடு வழியாக காந்தி சிலை வரை வரும் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. ஆர்.கே. சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவை ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர் மற்றும் ஆர்.கே. மடம் சாலை வழியாக வி.எம். தெருவை நோக்கித் திருப்பி விடப்படும். பெசன்ட் நகர் 5வது அவென்யூ சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் எலியட்ஸ் கடற்கரை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாது. அவை தங்கள் இலக்கை அடைய எம்.ஜி. சாலை வழியாக திருப்பி விடப்படும். எம்டிசி பேருந்துகள் பெசன்ட் நகர் பணிமனை வரை செல்ல அனுமதிக்கப்படும், ஆனால் பெசன்ட் அவென்யூ சாலை மற்றும் விலி பூங்கா நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : DREAM RUNNER ,MARATHON ,CAMERAZAR ,Chennai ,Dream Runner Marathon ,Chennai Runners Organization ,
× RELATED கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்...