×

8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு 9வது நபரை கல்யாணம் செய்தபோது சிக்கிய கொள்ளைக்காரி கைது: மகாராஷ்டிராவில் பரபரப்பு

 

பீட்: மகாராஷ்டிராவில் ஒன்பது ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கில்லாடி பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 35 வயதுடைய இளம்பெண் ஒருவர் புரோக்கர்கள் உதவியுடன் அடுத்தடுத்து திருமணங்களை செய்து வந்துள்ளார். பெண் கிடைக்காத கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து இந்த கும்பல் வியூகம் அமைத்து கைவரிசை காட்டியுள்ளது. ஏற்கனவே நடந்த 8 திருமணங்களில், திருமணமான ஒரே வாரத்தில் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த பெண் தலைமறைவாவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்த நூதன மோசடி மூலம் 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான தங்க நகைகளை அந்த பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் திருடியுள்ளனர். ஒவ்வொரு திருமணத்தின் போதும் இவரது உறவினர்களாக நடித்தவர்கள் பணம் கொடுத்து அமர்த்தப்பட்ட போலி நபர்கள் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உமாபூர் கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபரை 9வது முறையாக திருமணம் செய்ய முயன்ற போது, அந்த பெண்ணின் முன்னுக்குப் பின் முரணான பேச்சால் மணமகன் வீட்டாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படடதை அடுத்து, நேற்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அந்த பெண்ணிடம் முறையான அடையாள அட்டைகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஏஜெண்டுகளை தீவிரமாக தேடி வருகின்றனர். ‘மணப்பெண்ணின் ஆதார் விபரங்கள் மற்றும் குடும்ப பின்னணியை முறையாக சரிபார்த்த பின்னரே திருமணங்களை செய்ய வேண்டும்’ என்று பீட் மாவட்ட போலீசார் தற்போது பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maharashtra ,
× RELATED பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப்...