×

சந்தேஷ்காளியில் துப்பாக்கிச் சூடு; 2 சிஆர்பிஎப் வீரர், 3 போலீசார் படுகாயம்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு

 

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காளியில் ஏற்கனவே நடந்த தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகானுக்கு எதிரான சாட்சி ஒருவர் விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. இந்நிலையில், நேற்று இரவு சார் பெரியா அகரஹாட்டி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாமன் கேரி பகுதியில் தேர்தல் பிந்தைய வன்முறை மீண்டும் வெடித்தது. அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் திடீரென போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு, நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்தக் கொடூர தாக்குதலில் நஜாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரத் புர்காயித், ராஜ்பாரி புறக்காவல் நிலையத்தின் பாஸ்வத் கோஸ்வாமி மற்றும் ஒரு பெண் போலீசார் என மூவர் பலத்த காயமடைந்தனர்.

இவர்களுடன் பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப்., பிரிவைச் சேர்ந்த 2 வீரர்களும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர். காயமடைந்த 5 பேரையும் மீட்ட சக வீரர்கள், முதலுதவிக்காக மினாகா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் கொல்கத்தா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ‘அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பி.,க்கள் மற்றும் ஒன்றிய பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்’ என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். சந்தேஷ்காளி தொகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags : Sandeshkhali ,CRPF ,West Bengal ,Kolkata ,Sandeshkhali, West Bengal ,Sheikh Shahjahan ,
× RELATED பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசுப்...