×

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் மம்தாவை ஆளுநர் ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியுமா?.. சட்ட வல்லுநர்கள் பரபரப்பு கருத்து

 

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்தும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி மறுப்பது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பவானிபூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இருப்பினும், நேற்று கருத்து தெரிவித்த அவர், தான் தேர்தலில் தோற்கவில்லை என்றும், அதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவது இல்லை என்றும் கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

வரும் 8ம் தேதியுடன் தற்போதைய சட்டசபையின் ஆயுட்காலம் முடிவடைய உள்ள நிலையில், மம்தாவின் இந்த பிடிவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசியல் சாசன நிபுணரும், மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி, ‘தேர்தல் முடிவுகளில் அதிருப்தி இருப்பவர்கள் தனிப்பட்ட முறையில் 45 நாட்களுக்குள் தேர்தல் மனு தாக்கல் செய்யலாம். ஆனால், தேர்தல் ஆணையம் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கிய உடனேயே, பதவியில் இருக்கும் முதல்வர் ராஜினாமா செய்துவிட்டு புதிய அரசு அமைய வழிவிட வேண்டும் என்பது கட்டாயமான விதியாகும். இது ஜனநாயகத்தின் சுழற்சி முறை. மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுப்பது சட்டப்படி செல்லாது’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கூறுகையில், ‘ஒரே நேரத்தில் இரண்டு முதல்வர் இருக்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. பெரும்பான்மை பெற்ற கட்சி புதிய முதல்வரை தேர்வு செய்யும்போது, பழைய முதல்வர் தானாக விலக வேண்டும். மம்தா பானர்ஜி பதவி விலகத் தவறினால், அவரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு உண்டு’ என்றார். இந்திய அரசியல் சாசனத்தின் 172(1) பிரிவின்படி, சட்டசபையின் முதல் கூட்டம் கூடிய தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் மட்டுமே அதன் காலம் நீடிக்கும் என்பதும், அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட நீட்டிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Governor ,Mamata ,Chief Minister ,New Delhi ,Mamata Banerjee ,West Bengal Assembly elections ,West Bengal Assembly ,BJP ,Suvendu ,Bhavanipur ,
× RELATED 8 பேரை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு...