×

ஆதார் கார்டில் மாற்றங்கள் வரவுள்ளதாக கூறப்படும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்

டெல்லி: ஆதார் அட்டையில் மாற்றம் வர உள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் இந்த தகவலில் ஆதார் அட்டையில் புகைப்படம் மற்றும் QR கோட் மட்டுமே இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆதார் அட்டையில் மாற்றம் வர உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று திட்டவட்டமாக மறுப்பு கூறி இருக்கும் மத்திய அரசு, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்புமாறும் மக்களை கேட்டு கொண்டுள்ளது.

இதன் மூலம் பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்களை ஆதார் அட்டையில் நீக்கும் வகையில் ஆதார் அட்டையை மறுவடிவமைப்பு செய்யும் திட்டங்கள் எதுவும் இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசி இருக்கும் அரசு அதிகாரி ஒருவர் ஆதார் அட்டையை “புகைப்படம் மற்றும் QR குறியீடு மட்டும்” கொண்ட வடிவத்திற்கு மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பரவி வந்த தகவல்களை நிராகரித்தார். இத்தகைய செய்திகள் தவறானவை என்றும், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துபவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே புதிதாக ஆதார் வழங்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி அமர்வு, ‘‘இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திடமும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லுங்கள்’’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Aadhaar ,Federal Government ,Delhi ,government ,
× RELATED பஞ்சாபில் அடுத்தடுத்து நிகழ்ந்த...