×

தேர்தல் முடிவுகளுக்கு பின் நடந்த மோதல்: மேற்குவங்க வன்முறையில் 4 பேர் பலி; கட்சி அலுவலகங்கள் எரிப்பால் பதற்றம்

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை மோதல்களில் 4 பேர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு கொல்கத்தாவின் பெலேகாட்டா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஏஜென்ட் பிஸ்வஜித் பட்நாயக் (45) மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் வீட்டை விட்டு வெளியே வந்தபோது ஒரு கும்பலால் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘அவர் ஒரு குழாயின் மேல் விழுந்ததால் மூக்கு மற்றும் காதுகளில் ரத்தம் வழிந்து உயிரிழந்துள்ளார்’ என்று தெரிவித்தனர்.

இதேபோல் நியூ டவுன் பகுதியில் பாஜக தொண்டர் மது மொண்டல் (46) திரிணாமுல் ஆதரவாளர்களுடனான மோதலில் கீழே தள்ளிவிடப்பட்டு உயிரிழந்தார். முதல்வர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் கவுன்சிலர் அலுவலகம் தீவைத்து எரிக்கப்பட்டது. கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். உதயநாராயண்பூர் பகுதியில் பாஜக நிர்வாகி ஜாதவ் பார் (45) அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். இதேபோல் நானூர் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் அபீர் ஷேக் (45) மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இது பாஜகவினரின் வேலை என அவரது குடும்பத்தினர் கூறினாலும், உட்கட்சி பூசல் என பாஜக மறுத்துள்ளது. ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களிலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. மாநிலம் முழுவதும் நடந்த இந்த வன்முறைகளில் மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஒன்றிய ராணுவ படைகள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதான் பாஜகவின் அரசியல்
கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை குறிவைத்து ஒரு கும்பல் புல்டோசர் இயந்திரத்துடன் வந்து திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையின் போது அந்த அலுவலகக் கட்டிடம் முழுமையாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கடும் பீதியடைந்து, தங்களது கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘கொல்கத்தாவின் நியூ மார்க்கெட் பகுதியில் பாஜகவினர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டாடுகிறார்கள்’ என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் கூறுகையில், ‘போலீசார் முன்னிலையிலேயே இறைச்சிக் கடைகள் மற்றும் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய பாதுகாப்புப் படையினர் வேடிக்கை பார்க்கிறார்கள், இதுதான் பாஜகவின் அரசியல்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Tags : West Bengal ,Kolkata ,West ,Bengal assembly election ,Trinamool Congress ,Biswajit Patnaik ,Belekatha ,
× RELATED அதிமுகவில் குழப்பம்; எடப்பாடியுடன்...