* ஆர்ஆர் அணி பவுலர் பர்கருக்கு அபராதம்
ஜெய்ப்பூர்: லக்னோவில் நேற்று முன்தினம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியின்போது, ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நான்ட்ரே பர்கர், முரட்டுதனமாக நடந்து கொண்டதாகவும், கோபமாக எதிரணியினரை திட்டியதாகவும் புகார் எழுந்தது. அதையடுத்து, போட்டி நடுவரின் பரிந்துரைப்படி, பர்கருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
* டெல்லி அணியில் இணைகிறார் ஸ்டார்க்
சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இருப்பினும், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில், அவர் உடல் தகுதி அடைந்து விட்டதால், ஐபிஎல்லில் ஆடலாம் என, ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்ட அறிக்கையில், ‘மிட்செல் ஸ்டார்க் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். வரும் மே 1ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
