×

மும்பைக்கு எதிராக சிஎஸ்கே அபார வெற்றி

மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணி 103 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 33வது போட்டி மும்பை வான்கடே திடலில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த இணை 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 3வது ஓவர் முடிவில், கஸன்பர் பந்தில் ருதுராஜ் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சர்ப்ராஸ் கான் (14 ரன்), மிட்செல் சான்ட்னர் வீசிய 6வது ஓவரில் கிளீன் போல்டானார். அவரைத் தொடர்ந்து சிவம் தூபே (5 ரன்), கஸன்பர் வீசிய 9வது ஓவரின் முதல் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். பின் வந்த டெவால்ட் புரூவிஸ், 11 பந்துகளில் 2 சிக்சர், 1 பவுண்டரியுடன் 21 ரன் விளாசி, அஷ்வனி குமார் பந்தில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி 26 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் அரை சதம் எட்டினார். அவரது அதிரடியால் சிஎஸ்கே அணியின் ஸ்கோர், கவுரவமான எண்ணிக்கையில் தொடர்ந்து வந்தது.

பின் வந்த கார்த்திக் சர்மா, பொறுப்புடன் ஆடி சிஎஸ்கே அணியின் ஸ்கோர் உயர உதவினார். இந்த இணை 45 ரன்கள் சேர்த்த நிலையில், 5வது விக்கெட்டாக, கார்த்திக் சர்மா 18 ரன்னில் அவுட்டானார். 18வது ஓவரில் ஜேமி ஓவர்டன் (7 பந்து, 15 ரன்) ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய சாம்சன், 54 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரிகளுடன் 101 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நடப்பு தொடரில், இது, அவரது 2வது சதமாக அமைந்தது. 20 ஓவர் முடிவில் சென்னை அணி, 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் விளாசியது.

மும்பை தரப்பில் கஸன்பர், அஸ்வனி குமார் தலா 2, ஜஸ்பிரித் பும்ரா, மிட்செல் சான்ட்னர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 208 ரன் இலக்குடன் அடுத்து களமிறங்கிய மும்பை அணி அகீல் ஹூசைன் பந்துவீச்சில் விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. சூர்யகுமார்யாதவ் (35), திலக் வர்மா (37) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். மும்பை அணி 19 ஓவரில் 104 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி 103 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சிஎஸ்கே தரப்பில் அகீல் 4, நூர் அகமது 2, முகேஷ் சவுத்ரி, காம்போஜ், ஓவர்டன், குர்ஜப்னீத் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags : CSK ,Mumbai ,Chennai ,IPL ,Mumbai Indians ,Wankhede Stadium ,
× RELATED சில்லிபாயிண்ட்…