மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் முன்னணி வீராங்கனை எலினா ஸ்விடோலினா, 63வது நிலை வீராங்கனை அன்னா போன்டாரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் 2வது சுற்றுப் போட்டியில் உக்ரைனை சேர்ந்த 7ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா, ஹங்கேரியை சேர்ந்த உலகின் 63ம் நிலை வீராங்கனை அன்னா போன்டார் உடன் மோதினார்.
துவக்கம் முதல் சிறப்பாக ஆடி புள்ளிகளை குவித்த அன்னா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை வென்றார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் 2வது செட்டையும், 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய அவர் 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், குரோஷியா வீராங்கனை பெட்ரா மார்சின்கோ உடன் மோதினார். இப்போட்டியில் ஆக்ரோஷமாக ஆடிய பென்சிக், முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 2வது செட்டையும் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் அதிரடியாக கைப்பற்றினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய பென்சிக் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
