×

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்றாக சிஎஸ்கே அணியில் ஆகாஷ் மத்வால்

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக விலகிய இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்றாக, ஆகாஷ் மத்வால் அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் ஆடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சரியான துவக்க வீரர்கள் இல்லாமல் திணறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 2ல் மட்டும் வென்று புள்ளிப் பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் இளம் அதிரடி வீரர் ஆயுஷ் மாத்ரே, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது காயம் அடைந்ததால் மீதமுள்ள போட்டிகளில் ஆட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, மாத்ரேவுக்கு மாற்றாக, ஆகாஷ் மத்வாலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சேர்த்துள்ளது. இதற்காக அவருக்கு ரூ. 30 லட்சம் தரப்பட்டுள்ளது.

உத்தரகாண்டை சேர்ந்த ஆகாஷ் மத்வால், வலது கை வேகப்பந்து வீச்சாளர். இதற்கு முன், கடந்த 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் ஆடியுள்ளார். இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை ஆகாஷ் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியபோது, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், 5 ரன் மட்டுமே தந்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர் ஆகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Akash Madwal ,Ayush Madhre ,CSK ,Chennai ,Akash Madhwal ,Chennai Super Kings ,IPL ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி..!