×

நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு விவகாரம் அதிகாரிகள் முன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் தொழிலாளி பலி

நெல்லை: நெல்லை அருகே தாதனூத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தையின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். இதனை கொலை எனக்கூறி அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே தாதனூத்து கிராம மக்கள் வருகிற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக நெல்லை கலெக்டர் சுகுமாரிடம் அவர்கள் ஒரு மனுவும் அளித்திருந்தனர்.

இந்நிலையில் கிராம மக்களின் கோரிக்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக நெல்லை தாசில்தார் சந்திரகாசன், கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வி, தலையாரி மற்றும் தாழையூத்து போலீசார் நேற்று தாதனூத்து கிராமத்திற்கு சென்றனர். அங்கு அதிகாரிகள் முன்னிலையில் ஊர்மக்களிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக ஊர் மக்களிடையே ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன. அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி காவுமுத்து (55) என்பவர் தேர்தலை புறக்கணிக்கக் கூடாது என்றும், தேர்தலில் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் ஆதரவாகப் பேசினார்.

இதனால் மாரியப்பன், அவரது மகன் ஆனந்த் (35) உள்ளிட்ட சிலருக்கும் காவுமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கண்முன்னேயே இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த தள்ளுமுள்ளுவில் கீழே விழுந்ததில் நெஞ்சு, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த காவுமுத்துவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி காவுமுத்து நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த தள்ளுமுள்ளுவில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, காவுமுத்து நெஞ்சு வலியால் இறக்கவில்லை என்றும், அவர் திட்டமிட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். உறவினர்களின் இந்த திடீர் குற்றச்சாட்டால் அங்கு மேலும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள தாழையூத்து போலீசார், மாரியப்பனின் மகன் ஆனந்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nellai ,Dadhanoothu ,Tharaiyuthu ,
× RELATED மூணாறு அருகே காஸ் தட்டுப்பாடு; காலி...