×

காவி வேட்டி கட்டிக் கொண்டு ஒன்றிய அமைச்சர்களுக்கு காவடி தூக்குங்கள் கட்சியின் பெயரில் இருந்து அண்ணா, திராவிடத்தை எடுத்து விடுங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, பா.ஜ.வோடு நீங்கள் போடும் ஆட்டத்தையா பொறுத்துக் கொள்ளும்? உங்கள் கொட்டத்திற்கும் வாய்க்கொழுப்புக்கும் இந்தத் தேர்தல் முடிவுகட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த மறைமலைநகரில், ஆலந்தூர் வேட்பாளர் தா.மோ.அன்பரசன், உத்திரமேரூர் வேட்பாளர் க.சுந்தர், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்),

செங்கல்பட்டு வேட்பாளர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, செய்யூர் வேட்பாளர் சிந்தனைச்செல்வன்(விசிக), திருப்போரூர் வேட்பாளர் பன்னீர்தாஸ் (விசிக), மதுரவாயல் வேட்பாளர் காரப்பாக்கம் கணபதி, காஞ்சிபுரம் வேட்பாளர் நித்யா சுகுமார், மதுராந்தகம் வேட்பாளர் அம்லு பொன்மலர், தாம்பரம் வேட்பாளர் கிருத்திகாதேவி, பல்லாவரம் வேட்பாளர் அனகை முருகேசன் (தேமுதிக) ஆகியோரை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021-ல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம். இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி, அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார். மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் – முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம்.

தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று, காலை உணவு – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான், கொரோனாவில் போயிருக்க வேண்டுமாம். யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை. இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை. யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும். இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன்…

இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது. அதுதான் உண்மை. இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான். இன்னும் சொல்கிறேன்… 1971-ல் திமுக கொங்கு மண்டல மாணவரணி மாநாடு நடந்தது. அப்போது எனக்கு வயது 18. அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். மறைந்த நெஞ்சில் வாழக்கூடிய மொழிப்போர் எல். கணேசன் மாநாட்டுத் தலைவர். அப்போதுதான் முதன்முதலில் பேசுகிறேன்.

அவரிடம் அனுமதி வாங்கி, இரண்டு நிமிடம் மாநாட்டில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் என்ன பேசினேன் தெரியுமா? “மொழிக்காக – நம்முடைய இனத்திற்காக போராடுகிறோம். போராடும் இந்த நேரத்தில் நம்முடைய உயிரை இழக்கும் தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். (என்னுடைய தந்தை கலைஞர் மேடையில் உட்கார்ந்திருக்கிறார்) என்னுடைய தந்தைக்கு, நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த நான்கு ஆண் பிள்ளைகளில், ஒரு ஆண் பிள்ளை போய்விட்டாலும், என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார்.

காரணம், மொழிக்காக – இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று, என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்” என்று நான் பேசினேன். அப்படிப் பேசியவன்தான் உங்கள் முன்னால் நிற்கும் ஸ்டாலின். இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா? பழனிசாமி இவ்வளவும் பேசிவிட்டு, இன்றைக்கு காலையில், என்ன சொல்கிறார் தெரியுமா? “நான் அவ்வாறு பேசவே இல்லை; கொரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார்” என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்து, அடுத்த பொய்யை பேசியிருக்கிறார்.

என் இறுதிமூச்சு இருக்கும் வரைக்கும்; என் இதயத்துடிப்பு அடங்கும் வரைக்கும்; பெரியார் – அண்ணா – கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாட்டுக்காகவும் – தமிழ் மொழிக்காகவும் – தமிழினத்துக்காகவும் உழைத்துக் கொண்டேதான் இருப்பேன். பழனிசாமி அல்ல, அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ் சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது. பழனிசாமியின் லட்சணம் உங்களுக்கு தெரியாதா? இங்கிருந்து 50, 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், கூவத்தூரில்தானே கூத்தடித்தார்கள்.

அந்த அவமானக் காட்சிகள் எல்லாம் நாடு முழுவதும் ஒளிபரப்பாகி அனைவரும் வெட்கித் தலைகுனிந்து கொண்டிருக்கிறோம். அப்படி முதலமைச்சரான பழனிசாமியும், அவரது அமைச்சரவை ஆமாம்சாமிகளும், என்னென்ன ஆட்டம் போட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும். அந்த அவலங்களுக்குள் எல்லாம் நான் அதிகமாக போக விரும்பவில்லை. கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, இப்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தையா பொறுத்துக் கொள்ளும்? வெயிட் அண்ட் சி பழனிசாமி, ஏப்ரல் 23-தான் உங்களின் கொட்டத்துக்கும் – வாய்க்கொழுப்புக்கும் முடிவு கட்டும் ஜட்ஜ்மெண்ட் டே. நான் மறுபடியும் அழுத்தமாகச் சொல்கிறேன்…

பா.ஜ.க. போடுவது எதுவுமே, ஷார்ட்-டெர்ம் பிளான் கிடையாது; எல்லாமே லாங்-டெர்ம் பிளான்; எல்லாமே டேஞ்சரஸ் பிளான். அந்தப் பிளான்களை செய்வதற்கான துரோகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி. பழனிசாமி அவர்களே… நான் சுட்டிக் காட்டுவதால் புதிதாக ரோஷம் வந்து நீங்கள் எதையும் செய்யப் போவதில்லை. அதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு சார்பாக, உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன்…

எம்.ஜி.ஆர். தலைமையிலிருந்து, இப்போது காலத்தின் கோலமாக உங்கள் கையில் சிக்கியிருக்கும் கட்சியின் பெயரில் இருந்து, அண்ணாவின் பெயரை எடுத்துவிடுங்கள். திராவிடத்தையும் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு, காவி வேட்டி கட்டிக்கொண்டு, பியூஷ் கோயல், பட்னாவிஸ், தர்மேந்திர பிரதான், அமித்ஷா, மோடி என்று யாருக்கு வேண்டுமானாலும் காவடி தூக்குங்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாசிச பா.ஜ.க.வும் – அடிமை அ.தி.மு.க.வும், வேரோடும் – வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படப் போவது நிச்சயம்.

உறுதி, உறுதி. நான் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்வதெல்லாம், டபுள் எஞ்சின் – டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக? உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக. விடியல் பயணத்தை முடக்குவதற்காக. புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக. இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சமூகநீதியைப் படுகுழியில் தள்ளுவதற்காக.

இது எதையுமே, நான் கற்பனையாக சொல்லவில்லை. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு போடப்படும் தடைக்கற்கள். இதை, மக்கள் உணர வேண்டும். 0.07 வளர்ச்சி என்ற அவல நிலையில் அ.தி.மு.க. விட்டுச் சென்ற தமிழ்நாட்டை, உங்கள் ஆதரவுடன் மீட்டு, “11.19 விழுக்காடு வளர்ச்சி.

இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி. சூப்பர்ஸ்டார் ஸ்டேட்.” என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம். அதனால்தான், ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் வருகிறார்கள். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைக்க, ஏப்ரல் 23-ஆம் நாள், தமிழ்நாட்டு மக்கள் உதயசூரியனுக்கும் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Anna ,Dravida ,Stalin ,Edappadi Palaniswami ,Chennai ,Tamil Nadu ,Koovattur ,BJP ,Chief Minister ,M.K. Stalin ,Maraimalainagar ,Alandur ,Tha.Mo.Anparasan ,K.Sundar ,
× RELATED நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு...