×

முதல்வர் வேட்பாளராக 42 சதவீதத்துடன் மு.க.ஸ்டாலின் முன்னிலை; திமுக கூட்டணி 179 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும்: பிரபல ஊடக நிறுவனம் ஏபிபி நாடு கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை: தமிழக தேர்தலில், திமுக கூட்டணி 179 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று பிரபல ஊடக நிறுவனமான ஏபிபி நாடு வெளியிட்டுளள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணிக்கு அதிர்ச்சி தரும் வகையிலான இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் 23ம்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரங்களில் இறங்கியுள்ளன.

எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக, சசிகலா- ராமதாஸ் என 5 முனைப்போட்டி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடிக்க திமுகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க அதிமுகவும் களத்தில் இறங்கியுள்ளன. வரும் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மக்களிடம் பல்வேறு நிறுவனங்கள் கருத்துக்கணிப்புகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் ஏபிபி நாடு என்ற பிரபல ஊடக நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த கருத்துக்கணிப்பின் படி, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 172 முதல் 179 இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு மிகப்பெரிய பெரும்பான்மையாகும். அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பலமான கூட்டணிக் கட்டமைப்பு ஆகியவை திமுகவுக்கு பெரும் பலமாக உள்ளன. 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தொடர்ச்சியாக அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரும் திமுக, தனது செல்வாக்கை இன்னும் தக்க வைத்திருப்பதை இந்த கணிப்பு காட்டுகிறது.

அதிமுக- பாஜ கூட்டணி அதிகபட்சமாக 50 முதல் 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. கடந்த தேர்தலை விட இது குறைந்த எண்ணிக்கையாக உள்ளது. பலமுனைப் போட்டிகள் நிலவும் சூழலில், அதிமுகவின் வாக்கு வங்கியில் மற்ற கட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. நடிகர் விஜய்யின் தவெகவுக்கு 6 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

ஆனாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவை பொறுத்தே தவெகவுக்கு எந்தளவு வாக்குகள் கிடைக்க போகிறது என்பது உறுதியாக தெரியும். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் பட்டியலில் 42 சதவீதத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். 30 சதவீதத்துடன் எடப்பாடி பழனிசாமி 2ம் இடத்திலும், 24 சதவீதத்துடன் விஜய் 3ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 முதல் 42 சதவீத வாக்குகளை பெறும் என்றும் கணித்துள்ளது. மேலும், அதிமுக-பாஜ கூட்டணி 32 முதல் 35 சதவீத வாக்குளை பெறும். சென்னை மண்டலத்தில் உள்ள 16 தொகுதிகளில் திமுக கூட்டணி 11 தொகுதிகளை கைப்பற்றும். சென்னையில் அதிகபட்சமாக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலையில், திமுக கூட்டணி மிகவும் வலுவான முன்னிலையில் இருப்பதையே ஏபிபி நாடு நிறுவனத்தின் சர்வே சுட்டிக் காட்டியுள்ளது.

Tags : MK ,Stalin ,Chief Ministerial ,DMK alliance ,ABB Nadu ,Chennai ,Tamil Nadu ,AIADMK alliance ,
× RELATED நெல்லை அருகே தேர்தல் புறக்கணிப்பு...