சென்னை: சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் கிறித்துவ சமயத் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மெட்ராஸ் மறைமாவட்ட அலுவலகத்தில் சிஎஸ்ஐ பேராயர் பால் பிரான்சிஸ் ரவிச்சந்திரனை திமுக வேட்பாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
இந்த சந்திப்பில் சைதாப்பேட்டை வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாதவரம் வேட்பாளர் எஸ்.சுதர்சனம், பெரம்பூர் வேட்பாளர் ஆர்.டி.சேகர், மயிலாப்பூர் வேட்பாளர் மயிலை த.வேலு, தி.நகர் வேட்பாளர் ராஜா அன்பழகன், ஆர்.கே.நகர் வேட்பாளர் ஜே.ஜே. எபினேசர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தாம்பரம் Our Lady of Fatima Shrine தேவாலயத்தில் நடந்த மற்றொரு சந்திப்பில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆர்சி பேராயர் ஏ.நீதிநாதனை திமுக கூட்டணி வேட்பாளர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.
இதில் ஆலந்தூர் வேட்பாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன், தாம்பரம் வேட்பாளர் ஆர்.எஸ்.கிருத்திகாதேவி, பல்லாவரம் வேட்பாளர் அனகை டி.முருகேசன் (தேமுதிக), ஸ்ரீபெரும்புதூர் (தனி) வேட்பாளர் செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருப்போரூர் வேட்பாளர் பன்னீர்தாஸ் (விசிக), செங்கல்பட்டு வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து ராஜா அண்ணாமலைபுரத்தில் Jesus Calls நிறுவனர் பால் தினகரனை திமுக வேட்பாளர்கள் சந்தித்து ஆதரவு பெற்றனர்.
இச்சந்திப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு-துறைமுகம், த.வேலு- மயிலாப்பூர், தமிழன் பிரசன்னா- எழும்பூர் (தனி), கார்த்திக் மோகன்- வில்லிவாக்கம், அ.பு.பூர்ணிமா-அம்பத்தூர், கே.எஸ்.ரவிச்சந்திரன்-திரு.வி.க. நகர் (தனி) ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்புகளின் போது வில்சன் எம்.பி. உடனிருந்தார். அப்போது பேராயர்கள், பால் தினகரன் ஆகியோர் திமுக கூட்டணிக்கு தங்களது முழு ஆதரவை வழங்கினர்.
