கிருஷ்ணகிரி, ஏப்.8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் அத்தியாவசிய பணியாளர்கள் பணி நிமித்தமாக நேரடியாக வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க இயலாதவர்களுக்கு, தபால் மூலம் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பணிகள் என தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தென்னக ரெயில்வே, வானொலி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், ஊடகவியலாளர்கள், தமிழ்நாடு போக்குவரதது கழகம், மின் பகிர்மான கழகம், தீயணைப்பு மீட்பு துறைகள், சிறைகள், போக்குவரத்து காவல் ஆகிய துறைகளில் பணிபுரிய கூடியவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். இதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒருங்கிணைப்பு அலுவலர்கள் நியமனம் செய்து படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட துறை சார்ந்த பணியாளர்கள், தங்களுக்கு நியமனம் செய்யப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்களிடம், தேர்தல் நாளான 23ம்தேதி அத்தியாவசிய பணியில் ஈடுபடுவதால், வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாதவர்கள் என்று சான்று பெற்று, வாக்களிக்க தகுதியான ஆவணங்களுடன் தாங்கள் வாக்காளர்களாக உள்ள தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு 17, 18 மற்றும் 19ம்தேதி ஆகிய 3 நாட்களில் ஒருநாள் நேரில் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12டி ஐ வழங்கி, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் உள்ள அஞ்சல வாக்குப்பதிவு மையத்தில், தங்களின் வாக்குகளை செலுத்தலாம். இவ்வாறு கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
