×

டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பி, ஆயில் திருட்டு

தேன்கனிக்கோட்டை, ஏப்.9: தேன்கனிக்கோட்டை அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து ரூ.1.10 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பி மற்றும் ஆயிலை திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கெண்டகானப்பள்ளி தின்னூர் கிராமத்தில், கடந்த 6ம் தேதி திடீரென மின் தடை ஏற்பட்டது. ஆனால், மின்வாரியம் சார்பில் மின் நிறுத்தம் செய்யவில்லை என தெரியவந்தது. இதனால், சந்தேகமடைந்த மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடம் சென்று பார்த்த போது, அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் கீழே சாய்க்கப்பட்டு கிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். மர்ம நபர்கள் டிரான்ஸ்பார்மரை கீழே தள்ளி உடைத்து அதிலிருந்த 120 கிலோ காப்பர் கம்பி மற்றும் 145 லிட்டர் ஆயில் ஆகியவற்றை திருடிச் சென்றதால், அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து, மின்வாரிய உதவி பொறியாளர் தேன்மொழி, தேன்கனிக்கோட்டை காவல் நிலைத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிந்து சுமார் ரூ1.10 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பி, ஆயில் திருடிச்சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Thenkani Kottai ,Kendaganapalli Thinnur ,Krishnagiri district ,
× RELATED அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு