கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று (6ம் தேதி) கடைசி நாள் என்பதால், மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகமான சூளகிரி தாலுகா அலுவலகத்தில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் படிவங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருடமான தினேஷ்குமார் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள், தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கணக்குகள் பராமரிப்பு பிரிவு, தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்புமனுக்கள் பெறும்போது கடைபிடிக்க வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கி கூறினார். மேலும், பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்தல் பிரசாரத்தின் போது, அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான தினேஷ்குமார் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாராணி, தாசில்தார் ரமேஷ், தனி தாசில்தார் மகேஸ்வரி மற்றும் துணை தாசில்தார்கள் உடனிருந்தனர்.
