×

குடியிருப்பு பகுதிகளில் குப்பை கழிவுகளுக்கு தீவைப்பு

ஓசூர், ஏப்.8: ஓசூர் அருகே பேகேப்பள்ளி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் குப்பை கழிவுகளுக்கு தீ வைத்து விட்டு செல்வதால் எழும் நச்சுப்புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீசரஸ்வதி நகரில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஸ்ரீசரஸ்வதி நகர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் சமூக விரோதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பை கழிவுகளை கொண்டுவந்து கொட்டி, இரவு நேரத்தில் தீவைத்து எரிக்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. குப்பை கழிவுகளில் இருந்து வெளியேறிய நச்சுப்புகையால், அருகில் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல், வாந்தி, குமட்டல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிக்குள்ளாகினர்.

தொடர்ந்து இதுபோல் கழிவுகளுக்கு தீவைத்து எரிப்பதால் பாதிக்கப்படும் பொதுமக்கள், இதுகுறித்து மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், இரவு நேரத்தில் தீவைத்து எரிப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Hosur ,Begepalli panchayat ,Sri Saraswathi Nagar ,Krishnagiri district ,
× RELATED அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு