புதுச்சேரி, ஏப். 1: புதுச்சேரியில் போலி மருந்து, மாத்திரை தயாரித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு விற்று பல ஆயிரம் கோடி சம்பாதித்த வழக்கில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன், அவரது பங்குதாரர்கள், உதவி செய்தவர்கள், ஜிஎஸ்டி மோசடிக்கு உதவிய முன்னாள் ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி உள்பட 26 பேரை புதுச்சேரி சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து சிறையில் அடைத்தது. போலி மருந்து விவகாரத்தை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார்.
அதன்பின்னர், புதுச்சேரி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு, போலி மருந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ உத்தரவு வந்தது. தொடர்ந்து வழக்கில் கைப்பற்றிய ஆவணங்கள், மருந்துகள், கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை பதிவுகள் சிபிஐயிடம் ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழு தயார் செய்தது. ஆனால், சிபிஐக்கு மாற்றப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் போலி மருந்து வழக்கு விசாரணையை துவங்காமல் இருந்தது. இதனிடையே, சிபிஐ இவ்வழக்கை விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியது.
இதனை தொடர்ந்து டெல்லி தனியார் மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ராஜேஷ்குமார் சர்மா புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை மாதவரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருந்து நிறுவன மேலாளர் பாக்கியராஜ், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன், மங்கலம் பகுதியை சேர்ந்த விவேக், அம்மன் பார்மஸி விவேக் வெங்கடேசன், மீனாட்சி பார்மஸி ஏ.கே. ராணா ஆகிய 4 பேர் மீது சிபிஐ போலீசார் 2 எப்ஐஆர் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, டெல்லி சிபிஐ அதிகாரிகள் இவ்வழக்கு தொடர்பாக விசாரணையை துவங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் போலி மருந்து விசாரணையை துவக்கினர். பின்னர், புதுச்சேரி சிறப்பு புலனாய்வு குழு கைப்பற்றிய ஆவணங்கள், மருந்துகள், கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை பதிவுகள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அடுத்த வாரம் புதுவைக்கு மீண்டும் வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதில் பலரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

